2021-ல் தமிழகத்தில் த.மா.கா. ஆட்சி மலரும். ஜி.கே.வாசன்
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 2016ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி, பிரச்சாரம் ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
அதிமுக தரப்பில் இருந்து புதிய நிர்வாகிகள் மாற்றப்பட்டு முழுவீச்சில் களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளனர். திமுக சார்பில் அந்த கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் ‘நமக்கு நாமே’ என்ற பெயரில் பயணம் செய்து பொதுமக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறிந்து வருகிறார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ‘மக்கள் நல கூட்டணி’ என்ற பெயரில் புதிய கூட்டணி ஒன்றை அமைத்து வருகிறார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸை தொடங்கியுள்ள ஜி.கே.வாசன், ‘மக்களை நோக்கி மக்கள் தளபதி’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
நேற்று மாலை திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில், காட்டூர் மற்றும் அரியமங்கலம் கோட்ட த.மா.கா. சார்பில் விவசாயிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விவசாயிகளுடன் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் தரையில் அமர்ந்து சகஜமாக பேசிய ஜி.கே.வாசனிடம் விவசாயிகள், காவிரி டெல்டா பிரச்னைகள், விவசாயக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளைக் கூறினர்.
இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன், ”வருகிற சட்டசபை தேர்தலில் மக்களுக்கு பயனுள்ள, மக்கள் விரும்பும் வெற்றி வாய்ப்புள்ள கூட்டணியில் முதல் வரிசையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இருக்கும். நாங்கள் கைகட்டுகிறவர்கள்தான் அடுத்து ஆட்சியைப் பிடிப்பார்கள். 2021-ல் நிச்சயம் தமிழகத்தில் த.மா.கா. ஆட்சி மலரும். மீத்தேன் உள்ளிட்ட விவசாயிகளுக்கு விரோதமான திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவது, காவிரி நீர் பிரச்னை ஆகியவற்றுக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தி, பிரதமரைச் சந்திக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”