மக்கள் நலக்கூட்டணியில் பாமக, தேமுதிக சேருமா?
வைகோவின் முயற்சியால் மக்கள் நல கூட்டணி என்ற புதிய அமைப்பு உருவாகியுள்ளது. இந்த கூட்டணியில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட ஒருசில கட்சிகள் தற்போது இணைந்துள்ளது. இருப்பினும் விஜயகாந்தின் தேமுதிக இந்த கூட்டணியில் இணைந்தால் இந்த கூட்டணிக்கு பலம் அதிகமாகும் என்ற கருத்து நிலவி வருவதால், தேமுதிகவுக்கு வைகோ ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிமுக, திமுக கூட்டணியை விட மக்கள் நலக்கூட்டணி மேல் என விஜயகாந்த் தெரிவித்திருந்தார். இந்நிலையில் விஜயகாந்துக்கு வைகோ மீண்டும் இன்று அழைப்பு விடுத்துள்ளார்.
நேற்று பாளையங்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ‘அதிமுகவில் சுயநலமும் ஊழலும் இருக்கிறது. திமுகவில் குடும்ப நலனும் ஊழலும் இருக்கிறது. இந்தக் கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் நலக் கூட்டணியை நடுநிலையாளர்கள் பார்க்கிறார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் மதிமுகவை சிதைக்க திமுக முயற்சித்து தோல்வியைச் சந்தித்துள்ளது. இப்போது மதிமுகவை தங்கள் பக்கம் இழுக்க திமுக முயற்சித்தது. அவர்கள் பக்கம் செல்லவில்லை என்பதால் நிர்வாகிகள் பலரை திமுக இழுக்கப் பார்க்கிறது. அதையெல்லாம் மீறி மதிமுக வீறுகொண்டு எழும்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். இந்த கூட்டணிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரவேண்டும் என்று மீண்டும் அழைப்பு விடுக்கிறோம். இவ்வாறு வைகோ கூறினார்.
இந்நிலையில் எங்களுடன் மக்கள் நலக்கூட்டணி இணைந்து கொள்ளலாம் என பாமகவின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி கூறியுள்ளார். டெல்லியில் நேற்று செய்தியாளர்கள் மக்கள் நலக் கூட்டணி விஜயகாந்த்துக்கு அழைப்பு விடுத்தது போன்று பாமகவுக்கு அழைப்பு கொடுத்தால் என்ன பதில் சொல்வீர்கள் என்று அன்புமணியிடம் கேட்டதற்கு, “அவர்கள் விரும்பினால், பாமகவுடன் இணைந்து கொள்ளலாம்” என தெரிவித்தார்.