356 பிரிவை பயன்படுத்தி தமிழக அரசை கலைக்க வேண்டும். கவர்னரிடம் பாமக மனு

gk maniஇந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 356வது பிரிவைப் பயன்படுத்தி, முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான தமிழக அரசை கலைக்க வேண்டும் என்று தமிழக கவர்னர் மற்றும் ஜனாதிபதிக்கு பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி மனு அனுப்பி உள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 25.03.2015 அன்று நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அலுவல் ரீதியாக வெளிப்படையாக சில கருத்துக்களை தெரிவித்ததன் மூலம், அரசியலமைப்புச் சட்ட விதிகளை மீறியுள்ளார். அவரது செயல்பாடுகளால் தமிழகத்தில் அரசியலமைப்பு சட்ட செயல்பாடுகள் தோல்வியடைந்து விட்டன. இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி தமிழக ஆளுனருக்கு பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி மனு அனுப்பியுள்ளார். இந்த மனுவின் நகல் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆளுனருக்கு பா.ம.க. அனுப்பி உள்ள மனுவில், ”தமிழக சட்டப்பேரவையில் கடந்த 25.03.2015 அன்று நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அலுவல் ரீதியாக வெளிப்படையாக சில கருத்துக்களை தெரிவித்ததன் மூலம், அரசியலமைப்புச் சட்ட விதிகளை மீறியது குறித்து தங்களது கனிவான கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். முதலமைச்சர் பன்னீர் செல்வம், ”உன்னத தலைவியாகிய புரட்சித்தலைவி அம்மா அவர்களின் எழுச்சிமிகு ஆற்றலினால் வழிநடத்தப்படும் இந்த அரசு கடினமான நிதிச் சூழ்நிலைகளை எதிர்கொண்டுள்ள போதிலும், ஏழை எளிய மக்களின் நலன் காக்கும் பல்வேறு திட்டங்களை முனைந்து செயல்படுத்துவதில் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது. தமிழக மக்களின் நலனையும், தமிழ்நாட்டின் முன்னேற்றத்தையும் மட்டுமே லட்சியமாகக் கொண்டு, எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, தமிழக மக்களுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்து தியாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் போற்றுதலுக்குரிய புரட்சித்தலைவி அம்மா வழிகாட்டுதலின்படி இந்த நிதிநிலை அறிக்கையின் ஒவ்வொரு சொல்லும் அதற்கு அடிப்படையாக ஒவ்வொரு சிந்தனையும் அமைக்கப்பட்டுள்ளது என்பதை இந்த பேரவைக்கு தெரிவிப்பதில் மிகவும் பெருமை அடைகிறேன். புரட்சித்தலைவி அம்மா காட்டும் வழியில் அயராது பயணிக்கும் அதே வேளையில், மீண்டும் புரட்சித்தலைவி அம்மா முதலமைச்சராகப் பதவியேற்று, இந்த பேரவைக்கு வந்து நம்மையும் இந்த அரசையும் மிகுந்த ஆற்றலுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் வழி நடத்தி மாநிலத்தை புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்”.

ஆளுனரின் ஒப்பீட்டு ஆய்வுக்காக கடந்த 13.02.2014 அன்று அப்போது நிதியமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வம், 2014-15 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து ஆற்றிய உரையில் இருந்து சிறு பகுதியை கீழே குறிப்பிட்டிருக்கிறேன்.

“பேரவைத் தலைவர் அவர்களே! வரலாறு பல தலைவர்களைப் பற்றி குறிப்பிடுகிறது. ஆனால், அந்த வரலாற்றையே ஒருசில தலைவர்கள் உருவாக்க வல்லவர்கள். அத்தகைய வரலாற்றை உருவாக்கும் வல்லமை படைத்த தலைவராக முதலமைச்சர் திகழ்கிறார்கள். முதலமைச்சர் திறன் மிக்க தலைமையில் பணி புரிவதில் நான் பெருமை கொள்கிறேன். அனைவருடைய எதிர்பார்ப்புகளையும் நிறைவு செய்யும் வகையில், அதுவும் தற்போதுள்ள கடினமான நிதிச் சூழலில், ஒரு வரவு-செலவுத் திட்டத்தை தயாரிப்பது என்பது ஒரு கடினமான சவாலாகும். முதலமைச்சர் தனது ஆழ்ந்த அறிவாலும், சிந்தனையைத் தூண்டும் கருத்துக்களாலும், முழுமையான ஆதரவை வழங்கி, தன் அளவற்ற விவேகம் மற்றும் பரந்த அனுபவத்தால் வழி நடத்திய காரணத்தினால் மட்டுமே, இந்த நிதிநிலை அறிக்கையைத் தயாரித்து அளித்திட முடிந்தது.”என்று ஒப்புக் கொண்டிருக்கிறார்.

அதேபோல், 25.03.2015 அன்று பேரவையில் உரையாற்றிய இப்போதைய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “புரட்சித்தலைவி அம்மா வழிகாட்டுதலின்படி இந்த நிதிநிலை அறிக்கையின் ஒவ்வொரு சொல்லும் அதற்கு அடிப்படையாக ஒவ்வொரு சிந்தனையும் அமைக்கப்பட்டுள்ளது என்பதை இந்த பேரவைக்கு தெரிவிப்பதில் மிகவும் பெருமை அடைகிறேன்” என்று ஒப்புக்கொண்டிருக்கிறார். 2014 ஆம் ஆண்டில் நிதியமைச்சர் என்ற முறையில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெருமைகளைக் கூறியுள்ளார். ஆனால், 2015 ஆம் ஆண்டில் ஜெயலலிதா முதலமைச்சராக இல்லை; சாதாரண சட்டப்பேரவை உறுப்பினராகக் கூட இல்லை. மாறாக, கிரிமினல் சட்டப்படி தண்டிக்கப்பட்டவராக உள்ளார்.

ஊழல் வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்ற விவரத்தை தமிழக சட்டப்பேரவைத் தலைவருக்கும், மாநில ஆளுனராகிய உங்களுக்கும் பெங்களூரு நீதிமன்றம் முறைப்படி தெரிவித்தது. பின்னர் இந்தத் தகவல் உங்கள் இருவருக்கும் எழுத்து மூலம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழக முதலமைச்சர் பதவியில் இருந்து ஜெ.ஜெயலலிதா தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

அதன் பின்னர், ஓ.பன்னீர் செல்வம் 29.09.2014 அன்று முதலமைச்சராக பதவியேற்பதற்கான உறுதிமொழியையும், ரகசிய காப்பு உறுதிமொழியையும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 164 (3) பிரிவின் கீழ் நீங்கள் செய்து வைத்தீர்கள். ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் பின்னர் இடைக்கால பிணை வழங்கியது. அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஜெயலலிதாவுக்கு பதில் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர் செல்வம், தொடர்ந்து ஜெயலலிதாவின் புகழ்பாடி வருகிறார். அதுமட்டுமின்றி, “புரட்சித்தலைவி அம்மா வழிகாட்டுதலின்படி இந்த நிதிநிலை அறிக்கையின் ஒவ்வொரு சொல்லும் அதற்கு அடிப்படையாக ஒவ்வொரு சிந்தனையும் அமைக்கப்பட்டுள்ளது” என்பதை உறுதி செய்திருக்கிறார். இவ்வாறாக, முதலமைச்சர் என்ற முறையில் ஓ.பன்னீர் செல்வம் நிதிநிலை அறிக்கை தயாரிப்பு தொடர்பான பல ரகசிய தகவல்களை மாநில நிதிநிலை அறிக்கை தயாரிப்பு தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த, நம்பத்தகுந்த, அலுவல் சார்ந்த நிர்வாக செயல்பாட்டுடன் எந்த வகையிலும் சம்பந்தப்படாதவரான ஜெயலலிதாவுடன் பகிர்ந்து கொண்டு, அதனடிப்படையில் அவர் அளித்த ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை பெற்றுக் கொண்டதாக பன்னீர் செல்வம் ஒப்புக் கொண்டிருக்கிறார். தமது அரசியல் குருவான ஜெயலலிதா, ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டு மேல்முறையீட்டு விசாரணையை எதிர்கொண்டு வருபவர் என்பதை நன்றாக தெரிந்திருந்தும், முதலமைச்சர் என்ற முறையிலான தமது பணியை செய்வதற்கு ஜெயலலிதாவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலைப் பெற்றது அரசியலமைப்புச் சட்டம் தோல்வியடைந்து விட்டது என்பதையே காட்டுகிறது.

ஆளுனர் முன்னிலையில் பதவியேற்பு உறுதி மொழி மற்றும் ரகசிய காப்பு உறுதிமொழியை ஏற்றுக் கொண்ட ஓ.பன்னீர் செல்வம், இதன் மூலம், அவருக்கு செய்து வைக்கப்பட்ட ரகசிய காப்பு உறுதிமொழியை அவர் மீறியிருக்கிறார்; அரசியலமைப்புச் சட்ட விதிகளை அவமரியாதை செய்திருக்கிறார். அதுமட்டுமின்றி, ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற மூன்றாவது நபர் ஒருவரிடம் நிதிநிலை அறிக்கை அம்சங்கள் குறித்த ரகசிய தகவல்களை நேரடியாக தெரிவித்திருக்கிறார். இதன் மூலம், தமிழக அரசு நிர்வாகத்தை, அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு ஏற்றவாறு நடத்த முடியாது என்ற மோசமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இது அரசியலமைப்புச் சட்டத்தின் செயல்பாடுகள் தோல்வியடைந்துவிட்டதையே காட்டுகிறது. மூன்றாவது நபர் ஒருவரிடம் மாநில நிதிநிலை அறிக்கை குறித்த ரகசியங்களை பகிர்ந்து கொள்வது இந்திய அலுவல் சார்ந்த ரகசிய காப்பு சட்ட விதிகளின்படி குற்றமாகும். இதற்காக இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 356வது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசின் 2015-16 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தயாரிப்பதற்கான பணியை செய்வதில் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலை கோர வேண்டிய கட்டாய சூழல் எதுவும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இல்லை.

ஒரு மாநிலத்தின் நிர்வாக அதிகாரம் ஆளுநரிடம் தான் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது; அதை அவர் நேரடியாகவோ, அல்லது அரசியலமைப்புச் சட்டத்தின் 154வது பிரிவின் கீழ் தமது நிர்வாக ஆளுகைக்குள் உள்ள அதிகாரிகள் மூலமாகவோ செயல்படுத்தலாம் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது; ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் ஆளுனரால் தான் நியமிக்கப்பட வேண்டும்; மற்ற அமைச்சர்கள் அனைவரும் முதலமைச்சரின் ஆலோசனைப்படி ஆளுனரால் தான் நியமிக்கப்பட வேண்டும்; இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 164வது பிரிவின் கீழ் ஆளுனர் மன நிறைவுடன் இருக்கும் வரையில்தான் அமைச்சர்கள் பதவியில் நீடிக்க முடியும்; ஆளுநர் அவரது அதிகாரத்தை செயல்படுத்துவதில் அவருக்கு ஆலோசனை வழங்குவதற்காகவும், உதவி செய்வதற்காகவும் முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவைக் குழு உள்ளது. ஆளுநர் அவருக்கு அரசியல் அமைப்புச் சட்டப்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை தன்னிச்சையாக செயல்படுத்த வேண்டிய சூழல் ஏற்படாதபோது தான், முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவையின் ஆலோசனையை பெறவேண்டும்.

ஏதேனும் ஒரு விஷயத்தில் ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டால், அந்த விஷயத்தில் அவரது முடிவுதான் இறுதியானது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 163வது பிரிவின்படி, ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட்டாரா? செயல்படவில்லையா? என்பது குறித்தெல்லாம் யாரும் கேள்வி எழுப்ப முடியாது. நிதிநிலை அறிக்கை தயாரிப்புடன் அலுவல் ரீதியாகவோ, அல்லது நிர்வாக ரீதியாகவோ எந்த வகையிலும் சம்பந்தப்பட்டாத ஜெயலலிதாவின் உதவியுடனும், வழிகாட்டுதலுடனும் நிதிநிலை அறிக்கையை தயாரிப்பதன் மூலம் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ரகசிய காப்பு உறுதிமொழியை மீறியிருக்கிறார். இதற்காக, மனநிறைவு தத்துவத்தைப் பயன்படுத்தி  முதலமைச்சரை ஆளுநர் தகுதி நீக்கம் செய்ய முடியும், ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள தன்விருப்ப அதிகாரத்தைப் பயன்படுத்தி முதலமைச்சரை பதவிநீக்கம் செய்ய முடியும். முதலமைச்சரின் நடவடிக்கையால் தமிழகத்தில் அரசியலமைப்பு சட்ட செயல்பாடு தோல்வியடையும் நிலை ஏற்பட்டிருப்பதால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 356வது பிரிவின்படி ஆளுனருக்கு வழங்கப்பட்டுள்ள தன்விருப்ப அதிகாரத்தின்படியும் நடவடிக்கை எடுக்கலாம்.

தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஆற்றிய உரை நீதிமன்ற தீர்ப்பை மீறிய செயல், நீதித்துறை நிர்வாகத்தில் குறுக்கிடும் செயல் என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை. தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற கௌரவமான பொறுப்பில் இருப்பவரிடம் இருந்து இப்படியொரு நடவடிக்கையை யாரும் எதிர்பார்க்கவில்லை. முதலமைச்சர் தெரிவித்த கருத்துகள் மூலம் தமிழக அரசை ஜெயலலிதாதான் பின்வாசல் வழியாக இயக்குகிறார், வழி நடத்துகிறார் என்பது உறுதியாகிறது.

தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அலுவல் சார்ந்த ரகசிய காப்பு சட்டத்தின் 3 (சி) பிரிவின்படியும் குற்றம் இழைத்திருக்கிறார். இதற்காக அலுவல் சார்ந்த ரகசிய காப்பு சட்டவிதிகளின்படி, அவர் மீது நடவடிக்கை எடுக்க இயலும். இதற்கு மாநில ஆளுநரின் அனுமதியை கோருகிறேன். தமிழக முதலமைச்சர் நிதிநிலை அறிக்கை தயாரிப்பு தொடர்பான ரகசிய அரசு ஆவணங்களையும், தகவல்களையும், அலுவல் சார்ந்த பொறுப்பு எதுவும் இல்லாத ஒருவருடன் பகிர்ந்து கொண்டதன் மூலம், உங்களால் செய்து வைக்கப்பட்ட ரகசிய காப்பு உறுதிமொழியை மீறியது மட்டுமின்றி, அரசியலமைப்புச் சட்ட செயல்பாடுகள் தோல்வியடைவதற்கும் காரணமாக இருந்திருக்கிறார். அதுமட்டுமின்றி, அலுவல் சார்ந்த ரகசிய காப்பு சட்டவிதிகளுக்கு எதிராகவும் செயல்பட்டிருக்கிறார். இந்த காரணங்களுக்காக அரசியலமைப்பு சட்டத்தின் 163-வது பிரிவின்கீழ் ஆளுனருக்கு வழங்கப்பட்டுள்ள தன்விருப்ப சட்டத்தின்படி மனநிறைவு தத்துவத்தின் அடிப்படையில் அரசியலமைப்பு சட்டத்தின் 164வது பிரிவைப் பயன்படுத்த வேண்டும்; தமிழ்நாட்டில் அரசியலமைப்பு சட்ட செயல்பாடுகள் தோல்வியடைந்துவிட்டதற்காக இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 356வது பிரிவைப் பயன்படுத்தி, முதலமைச்சர் தலைமையிலான அரசை கலைக்க வேண்டும்; அதன் மூலம் சர்வாதிகார ஆட்சியில் இருந்து தமிழகத்தை மீட்டெடுப்பதுடன், சட்டத்தின் ஆட்சியையும், ஜனநாயக பாரம்பரியத்தையும் நிலைநிறுத்த வேண்டும் என்று தயவு செய்து கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறி உள்ளார்.

Leave a Reply