இலங்கை அதிபர் ராஜபக்சே நாளை மறுநாள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்ய வருகிறார். இலங்கை அதிபரின் வருகைக்கு தமிழகத்தில் உள்ள சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நேற்று வைகோ, ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டும் அறப்போராட்டம் நடைபெறும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் ராஜபக்சே வருகைக்கு மத்திய அரசு அனுமதி தரக்கூடாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார் .
இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இராஜபக்சே வரும் 9 ஆம் தேதி மாலை திருப்பதிக்கு வரவிருப்பதாகவும், அடுத்தநாள் காலை சாமி தரிசனம் செய்யப்போவதாகவும் இந்திய, இலங்கை ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. உலகின் எந்த தர்மத்தையும் மதிக்காமல் தமிழினத்தை கொடூரமான முறையில் கொன்று குவித்த கொடியவனைத் தண்டிப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா தான் முன்னெடுக்க வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் விரும்பினார்கள்.
ஆனால், அதை செய்யத் தவறிவிட்ட மத்திய அரசு இந்தியாவின் முக்கியமான நிகழ்வுகளுக்கெல்லாம் இராஜபக்சேவை அழைத்து மரியாதை செய்து கொண்டிருக்கிறது. ஈழத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இந்து கோவில்களைத் தரைமட்டமாக்கிய கொடியவனை திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் முழுக் குட மரியாதையுடன் வரவேற்பது சாத்தானுக்கு சாமரம் வீசுவதற்கு இணையான செயலாகும். தமிழர்களின் உணர்வுகளை இதைவிட மோசமாக எவராலும் புண்படுத்த முடியாது.
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா என தமிழர்கள் அதிகம் வாழக்கூடிய, ஜனநாயகத்தை மதிக்கக் கூடிய எந்த நாட்டிலும் இராஜபக்சே சுதந்திரமாக நடமாட முடியாத நிலையில், இந்தியாவில் மட்டும் நினைத்த போதெல்லாம் இராஜபக்சே வந்து செல்ல மத்திய அரசு அனுமதிப்பது சரியல்ல. எனவே, கொலைகாரன் இராஜபக்சே திருப்பதி வர அளிக்கப்பட்ட அனுமதியை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.