சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தை ஜெயலலிதாவுக்காக காத்திருக்காமல் உடனடியாக தமிழக அரசு மக்கள் பயன்பாட்டிற்காக தொடக்க விழாவினை நடத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
சென்னையில் போக்குவரத்து நெரிசலை போக்குவதற்காக வண்ணாரப் பேட்டையில் தொடங்கி உயர்நீதிமன்றம், அண்ணா சாலை, சைதாப்பேட்டை வழியாக வானூர்தி நிலையம் வரை 23.1 கி.மீ நீளத்திற்கு முதல் பாதையும், சென்ட்ரல் ரேயில்வே நிலையத்திலிருந்து அண்ணா நகர், திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி, ஆலந்தூர் வழியாக பரங்கிமலை வரை 22 கி.மீ நீளத்திற்கு இரண்டாவது பாதையும் அமைக்கத் திட்டமிடப்பட்டு 2009ஆம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன. இதில் இரண்டாவது பாதையில் கோயம்பேடு–ஆலந்தூர் இடையே 10 கி.மீ. நீளத்திற்குப் பணிகள் முடிவடைந்து விட்ட நிலையில், அப்பாதையில் வணிக அடிப்படையிலான ரெயில்வே சேவையை தொடங்க சென்னை பெருநகர ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சென்னை பெருநகர ரெயில்வே திட்டத்தில் மத்திய அரசும், தமிழக அரசும் சம பங்குதாரர்கள் என்ற போதிலும், திட்டம் செயல்படுத்தப்படும் மாநிலத்தின் அரசு என்ற முறையில் திட்டத்தின் தொடக்க விழா குறித்து தமிழக அரசு தான் முடிவெடுக்க வேண்டும்.
அதன்படி கோயம்பேடு– ஆலந்தூர் இடையே பெருநகர ரெயில்வே சேவையை தொடங்குவதற்கான தேதியை தீர்மானிக்கும்படி கடந்த அக்டோபர் மாதமே தமிழக அரசை பெருநகர ரெயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டது.
ஆனால், தமிழக அரசிடமிருந்து எந்த பதிலும் வராத நிலையில் கடந்த ஜனவரி மாதம் மீண்டும் இதுகுறித்து அரசுக்கு நினைவூட்டப்பட்டது. எனினும், இப்போதும் தமிழக அரசிடமிருந்து இதுகுறித்து எந்த பதிலும் வரவில்லை.
இப்போதைய நிலையில், மார்ச் மாத இறுதிக்குள் பெருநகர ரெயில்வே சேவையை தொடங்க வாய்ப்பில்லை; அதன்பிறகும் இந்த சேவை எப்போது தொடங்கும் என்பதை உறுதியாக கூற முடியாது என தமிழக அரசின் உயரதிகாரி ஒருவர் கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்– அமைச்சருமான ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு, பதவி இழந்துள்ள நிலையில் புதிய திட்டங்களுக்கான தொடக்க விழாக்களை நடத்தக்கூடாது என தமிழக முதல்வருக்கு மேலிடத்திலிருந்து அறிவுரை வழங்கப்பட்டிருப்பதாகவும், அதனால் தான் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜெயலலிதா விடுவிக்கப்பட்டு முதல்வராக பதவியேற்ற பிறகு தான் திறப்பு விழா நடத்தப்படும் என்றும் தெரிய வருகிறது.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள சாலைகளில் ஜவகர்லால் நேரு 100அடி சாலை முதன்மையானது. இந்தச் சாலையின் மீது அமைக்கப்பட்டிருக்கும் பெருநகர ரெயில்வே பாதை திறக்கப்பட்டால் பெருமளவில் போக்குவரத்து நெரிசல் குறையும். இதையெல்லாம் கருத்தில் கொண்டு பெருநகர ரெயில்வே சேவையை உடனடியாக தொடங்காமல், ஜெயலலிதா விடுதலை செய்யப்படுவாரா? என்பது கூட தெரியாமல், அவருக்காக தமிழக அரசு காத்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
இத்திட்டம் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் பல்லாயிரம் கோடி செலவில் நிறைவேற்றி முடிக்கப்பட்ட பல திட்டங்களும் ஜெயலலிதாவுக்காக காத்துக்கிடக்கின்றன.
ஜெயலலிதா தண்டனையிலிருந்து மீண்டு வரும் வரை தமிழக மக்கள் எந்த வசதியையும் அனுபவிக்கக் கூடாது என்று அரசு நினைத்தால் அது மிகவும் குரூரமான சிந்தனை ஆகும். மக்களுக்காகத் தான் அரசு…. மக்கள் முதல்வருக்காக அல்ல… என்பதை உணர்ந்து கோயம்பேடு ஆலந்தூர் இடையிலான பெருநகர ரெயில்வே பாதை உட்பட தமிழ்நாடு முழுவதும் நிறை வேற்றி முடிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு தமிழக அரசு அர்ப்பணிக்க வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.