பொறுப்பற்ற முறையில் வைகோ அறைகூவல் விடுப்பது ஆபத்தானது. ராமதாஸ்
தமிழகத்தில் மதுவிலக்கு போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வரும் நிலையில் இதுவரை அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மட்டுமே போராடி வந்தன. ஆனால் தற்போது இந்த போராட்டத்தில் மாணவர்களும் குதித்துள்ளதால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மாணவர்கள் டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்க வேண்டும், வழக்கு வந்தால் நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று அறைகூவல் விட்டுள்ளதால் மாணவர்களிடையே பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வைகோவின் அறைகூவலை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டித்துள்ளார். மாணவர்கள் அனைவரும் வகுப்புகளை விட்டு வெளியேறி போராட வேண்டும் என்று சில அரசியல் கட்சித் தலைவர்கள் பொறுப்பற்ற முறையில் அறைகூவல் விடுப்பது ஆபத்தானது என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: “தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட வேண்டும் என வலியுறுத்தி மாணவர் அமைப்புகள் போராடுவது வரவேற்கத்தக்கது. ஆனால், மாணவர்களின் போராட்டம் ஒடுக்கப்படும் விதம் கவலை அளிக்கிறது.
தமிழகத்தை கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் திட்டமிட்டு மக்கள் மீது மதுவைத் திணித்து சீரழித்து விட்டன. மது அரக்கனின் கோரப்பிடியிலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காகத் தான் கடந்த 35 ஆண்டுகளாக நான் எண்ணற்ற போராட்டங்களை நடத்தி வருகிறேன். தற்போது அனைத்து மாவட்டங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்டு வரும் மது ஒழிப்பு போராட்டங்களுக்கு மக்கள், குறிப்பாக பெண்கள் பெருமளவில் திரண்டு வந்து ஆதரவளித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இப்போது மாணவர்களும் மதுவுக்கு எதிராக போராடத் தொடங்கியிருப்பது நல்ல அறிகுறி தான். ஆனால், மாணவர்களை பகடைக்காய்களாக பயன்படுத்தி, அவர்களின் போராட்டத்தை வன்முறைப் போராட்டமாக சித்தரிக்கவும், போராட்டத்தில் வன்முறையைத் தூண்டி திசை திருப்பவும் முயற்சிகள் நடப்பதை மாணவர் சமுதாயம் உணர வேண்டும்.
தமிழ்நாட்டில் தற்போது நடைபெறும் அரசு மக்கள் நலனில் சற்றும் அக்கறை இல்லாத அரசாகும். மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசாக இருந்திருந்தால் 2012 ஆம் ஆண்டு ஜூலை மற்றும் டிசம்பர் மாதங்களில் மதுக்கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டத்தை பா.ம.க. நடத்தியபோதே முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தியிருக்கும். ஆனால், மதுவிலக்கில் அக்கறை இல்லாத தமிழக அரசு மதுவுக்கு எதிராக போராடுபவர்கள் மீது அவதூறு பரப்புவதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் நடத்தும் போராட்டத்திலும் சமூக விரோத சக்திகளை ஊடுருவச் செய்து வன்முறையை ஏற்படுத்தி, மக்கள் மத்தியில் அவப்பெயரை ஏற்படுத்த தமிழக அரசு தயங்காது. சென்னை சேத்துப்பட்டு பகுதியில் அறவழியில் தொடங்கிய போராட்டத்தில் திட்டமிட்டு வன்முறையை புகுத்தி, அதைக் காரணம் காட்டி மாணவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியது. மாணவர்களின் போராட்டத்தை தமிழக அரசும், காவல்துறையும் எவ்வாறு கையாளும் என்பதற்கு இதுதான் சிறந்த உதாரணமாகும்.
சென்னையில் போராட்டம் நடத்திய மாணவ, மாணவியர்களை காவல்துறையினர் இரும்புக் கம்பிகளால் தாக்கி காயப்படுத்தியிருக்கின்றனர். காட்டுமிராண்டித்தனமான இந்த தாக்குதலில் பல மாணவர்களின் எலும்புகள் முறிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த அடக்குமுறை கடுமையாக கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது தான் அனைத்து தரப்பினரின் நோக்கமாகவும் உள்ளது. இந்நோக்கம் அறவழியில் எட்டப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் விருப்பமாகும். இது தான் மதுவிலக்குக்காக தமது வாழ்நாள் முழுவதும் குரல் கொடுத்த தேசத்தந்தை காந்தியடிகளுக்கு நாம் செலுத்தும் மரியாதையாக இருக்கும். கடந்த 2008ஆம் ஆண்டில் பாட்டாளி மகளிர் சங்கம் சார்பிலும், 2012 ஆம் ஆண்டி கட்சியின் சார்பிலும் மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அவை அனைத்தும் காவல்துறையிடம் அனுமதி பெற்று தான் அறவழியில், அமைதியாக நடத்தப்பட்டன. ஆனால், இப்போது ‘‘மதுக்கடைகளை அறவழியில் போராடி மூட முடியாது; மற வழியில் போராடித் தான் மூட மூடியும். ஆகவே, மாணவர்கள் அனைவரும் வகுப்புகளை விட்டு வெளியேறி போராட வேண்டும்’’ என்று சில அரசியல் கட்சித் தலைவர்கள் பொறுப்பற்ற முறையில் அறைகூவல் விடுப்பது ஆபத்தானது ஆகும்.
தமிழகத்தில் கள் கூடாது என்பதற்காக தமது தோட்டத்திலிருந்த தென்னை மரங்கள் அனைத்தையும் வெட்டி வீழ்த்தியவர் தந்தை பெரியார். ஆனால், அவரது வழி வந்ததாகக் கூறிக் கொள்ளும் ஒரு கட்சியின் முன்னணி தலைவர்கள் மது ஆலைகளை நடத்துகிறார்கள். மதுவிலக்குக்குக் முன்னோட்டமாக மது ஆலைகளை ஏன் மூடக்கூடாது? என்று கேட்டால் மதுவிலக்கு நடைமுறைக்கு வந்த பிறகு மது ஆலைகள் மூடப்பட்டு விடும் என்று ‘பொது அறிவு’டன் பேசுகிறார்கள். தங்களிடம் உள்ள குறைகளை மறைப்பதற்காக அப்பாவி மாணவர்களை போராட்டம் நடத்த தூண்டிவிடுகிறார்கள்.
களத்தில் இறங்கி போராடும் மாணவர்கள் பணக்காரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல. மாறாக ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தான். படிக்கும் காலத்தில் அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டால் அவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு மட்டுமின்றி ஒட்டுமொத்த எதிர்காலமும் பாழாகி விடும். சென்னையில் போராட்டம் நடத்திய மாணவியின் வயிற்றை காவல் உதவி ஆணையர் ஒருவர் பூட்ஸ் காலால் உதைக்கும் படம் இன்றைய செய்தித்தாள்களில் வெளியாகியிருப்பது கண்ணீரை வரவழைக்கிறது. அம்மாணவிக்கு ஏற்படும் உடல் நலம் சார்ந்த பாதிப்புகளுக்கு யார் பொறுப்பேற்பார்?
மதுக்கடைகளுக்கு எதிரான மாணவர்களின் உணர்வுகளை பா.ம.க. மதிக்கிறது. ஆனால், மதுக்கடைகளை மூடுவதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. ஒருபுறம் அறவழியில் போராடி வரும் பா.ம.க., மறுபுறம் சட்டப் போராட்டம் நடத்தி தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 604 மதுக்கடைகளை மூட வைத்திருக்கிறது. அடுத்தகட்டமாக மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 1500 மதுக்கடைகள் விரைவில் மூடப்படக் கூடும். எனவே, மாணவர்கள் அரசின் அடக்குமுறைக்கு இரையாகி கல்வியும், எதிர்காலமும் பாதிக்கப்படுவதற்கு இடம் தரக்கூடாது. செல்பேசி கோபுரங்கள் மீது ஏறி போராட்டம் நடத்துவது ஆபத்தானது என்பதால் அத்தகைய போராட்டங்களையும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். அனைத்துத் தரப்பு மக்களின் பிரதிநிதியாக பா.ம.க. போராடி மதுவிலக்கை வெகுவிரைவில் சாத்தியமாக்கும்.
அதேநேரத்தில் மக்களின் உணர்வுகளை மதித்து தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகளை அரசு மூட வேண்டும். மதுவுக்கு எதிரான போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்; அவர்களின் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப்பெற வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.