7 பேர் விடுதலை. தமிழக அரசு நாடகம். பாமக ராமதாஸ் கருத்து

7 பேர் விடுதலை. தமிழக அரசு நாடகம். பாமக ராமதாஸ் கருத்து
ramdoss
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி கடந்த 25ஆண்டுகளாக சிறையில் வாடும் ஏழு தமிழர்களின் விடுதலைக்காக நேற்று தமிழக அரசு மத்திய அரசு எழுதியுள்ள கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு திமுக தலைவர் கருணாநிதி மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் வரவேற்றுள்ளனர். இந்நிலையில் எதிலுமே குறைகாணும் நோக்கத்துடன் கடந்த பல ஆண்டுகளாக அரசியல் செய்து வரும் பாமக நிறுவனர் ராமதாஸ், இந்த விவகாரத்திலும் தனது எதிர்ப்ப்பை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்வது குறித்த கருத்து கேட்டு மத்திய உள்துறை செயலருக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

இது 7 தமிழர்களின் விடுதலையை தட்டிக்கழிக்கும் நோக்கம் கொண்ட முழுக்க முழுக்க அரசியல் லாபம் தேடும் செயலாகும். 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்குமா? என்பது தான் இப்போது விடை தேடப்பட வேண்டிய வினா ஆகும்.காங்கிரசும், பாரதிய ஜனதாவும் அரசியலில் வெவ்வேறு துருவங்களாக இருந்தாலும் 7 தமிழர்களை விடுதலை செய்யக்கூடாது என்பதில் இரு கட்சிகளுக்கும் ஒரே நிலைப்பாடு தான்.இந்த உண்மைகள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தெரியாதவை அல்ல

ஜெயலலிதா நினைத்தால் அமைச்சரவைக் கூட்டத்தை இந்த நிமிடமே கூட்டி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின்படி 7 தமிழர்களையும் விடுதலை செய்யும்படி ஆளுனருக்கு பரிந்துரை செய்யலாம். அவ்வாறு பரிந்துரைத்தால், 7 தமிழர்களும் இன்று மாலைக்குள் விடுதலையாகி சுதந்திரக் காற்றை சுவாசிக்க வாய்ப்பிருக்கிறது.
ஆனால், அதை செய்யாமல், மத்திய அரசிடம் அனுமதி கோருவது ஒருபோதும் வெற்றி பெறப்போவதில்லை. ஜெயலலிதா அரசின் இந்த நாடகத்தை மக்கள் அறிவர்; ஏமாற மாட்டார்கள்.எனவே, 161 ஆவது பிரிவைப் பயன்படுத்தி எழுவரையும் விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்”

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply