இலவசம் வேண்டாம் என்று கூறிய பாமகவின் அதிரடி பல்டி அறிக்கை
இலவச பொருட்களை வழங்க மாட்டோம் என்றும் இலவசங்களை கொடுத்து கொடுத்துதான் தமிழர்களை சோம்பேறிகளாக திராவிட கட்சிகள் ஆக்கியுள்ளதாகவும், கல்வி, மருத்துவம் தவிர வேறு எதையும் பாமக ஆட்சிக்கு வந்தால் இலவசமாக வழங்காது என்றும் மேடைக்கு மேடை பறைசாற்றி வந்த பாமக, தற்போது தமிழகத்தில் விவசாயத்திற்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை அரசு நிறுத்த கூடாது என்று வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாடு மின்வாரியத்தின் கடன் சீரமைப்பு குறித்த மத்திய அரசின் கருத்துரு குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா கொடநாடு மாளிகையில் ஆலோசனை நடத்தியுள்ளார். இக்கூட்டத்தின் முடிவு குறித்து தெரியவில்லை. ஆனால், மின்வாரிய நிதி சீரமைப்புக்கான நிபந்தனைகள் கடுமையானவை என்பதால் மக்களை பாதிக்கும் முடிவு எடுக்கப்பட்டிருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
தமிழ்நாடு மின்வாரியத்தின் இழப்புக்கு காரணம் அதில் நிலவும் நிர்வாக சீர்கேடுகளும், ஊழல்களும் தான். அதிக எண்ணிக்கையில் மின் திட்டங்களைச் செயல்படுத்தி குறைந்த செலவில் மின்சாரத்தை தயாரித்தாலே அடுத்த சில ஆண்டுகளில் கடனைக் குறைத்து மின்வாரியத்தின் நிதிநிலையை சீரமைக்க முடியும். இதற்கான செயல்திட்டங்கள் பா.ம.க. வரைவுத் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
எனவே, மின் கட்டணத்தை உயர்த்துதல், விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட மக்களை பாதிக்கும் பரிந்துரைகளை ஒரு போதும் தமிழக அரசு ஏற்கக்கூடாது. இது தொடர்பான அரசின் நிலைப்பாட்டை முதலமைச்சர் ஜெயலலிதா வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்”. என்று தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையின் மூலம் இலவசமே வேண்டாம் என்று கூறிவந்த பாமக, இலவச மின்சாரத்திற்கு மட்டும் ஆதரவு தெரிவித்து தனது கொள்கையில் இருந்து பல்டி அடித்துள்ளதாக டுவிட்டரில் பலர் கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.