விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி திருச்சியில் உள்ள விவசாயிகள் கடந்த சில நாட்களாக நூதன போராட்டம் ஒன்றை நடத்தி வருகின்றனர். 11 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வரும் அவர்கள் பாடைகட்டி ஒப்பாரி வைக்கும் போராட்டத்தையும் நேற்று நடத்தினர். இதற்கு அடுத்த கட்டமாக முதல்வர் முன் விஷம் குடித்து தற்கொலை செய்யும் போராட்டம் நடத்தவுள்ளதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.
திருச்சியில் இயங்கி வரும் பாரதிய கிசான் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்றும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் விவசாய கடன்களுக்கு எதிரான ஜப்தி நடவடிக்கைகளை வங்கிகள் கைவிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 11 நாட்களாக பலவிதமான நூதன போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
முதல் நாள் அரை நிர்வாண போராட்டம், இரண்டாவது நாளில் நெற்றியில் நாமம் போட்ட போராட்டம், அடுத்து உடலில் பட்டை மற்றும் உத்திராட்சை கொட்டை அணிந்த போராட்டம், 4வது நாள் குல்லா அணிந்து போராட்டம், 5ம் நாள் வாயில் கருப்பு துணியிடன் அரை நிர்வாண போராட்டம் என விதவிதமான நூதன போராட்டத்தை நடத்தி வந்த இந்த விவசாயிகள் நேற்று பாடைகட்டி ஒப்பாரி வைக்கும் நூதன போராட்டம் ஒன்றை நடத்தினர்.
இந்த போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய கிசான் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு, “எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி 11 நாட்களாக போராடிவரும் நாங்கள், விதவிதமான போராட்டங்களை நடத்தி வருகின்றோம். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய வருவாய் துறை அமைச்சர் உதயகுமார், மாநிலத்தில் வறட்சி இல்லை எனக் கூறி, முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து விட்டார்.
விவசாயிகளுக்கு உரிய விலை வழங்காமல், மத்திய, மாநில அரசுகள் குறைந்த விலையே வழங்கி வருகிறது. இதை அரசுக்கு உணர்த்தவே போராட்டம் நடத்தி வருகிறோம். கடைசி நாள் அன்று தூக்கு கயிறு போராட்டம் நடத்த உள்ளோம். அனைத்து கடன்களை தள்ளுபடி செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் பிரதமர் மற்றும் முதல்வர் அலுவலகம் முன் விவசாயிகள் விஷம் குடித்து தற்கொலை செய்ய உள்ளோம்” என்றார் கட்டமாக.