மத்தியபிரதேச தலைநகர் போபாலில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலை வில் உள்ளது போஜ்பூர். இந்த சிற்றூருக்கு சிறப்பம்சமாகத் திகழ்கிறது, ஸ்ரீபோஜேஸ்வர் திருக்கோயில்.
சிறிய குன்றின் மீது சிவப்பு வண்ணக் கற்களாலான கட்டுமானத்துடன் அமைந்திருக்கிறது போஜேஸ்வர் கோயில். குன்றின் அடிவாரத்தில் இருந்து வளைந்துசெல்லும் பாதை நம்மை கோயிலுக்கு அழைத்துச் செல்கிறது. கட்டுமானம் முற்றுப்பெறாத ஆலயம் என்கிறார்கள். அதற்குக் காரணமாக ஒரு கதையையும் சொல்கிறார்கள்.
முற்காலத்தில் புகழ்பெற்று திகழ்ந்த போஜராஜனின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது இந்த பகுதி (மால்வா பிரதேசம்). மகாகவி காளிதாஸ் அலங்கரித்தது, இவரது அரசவையைத்தான். ஒருமுறை, கொடுமையான சரும நோய்க்கு ஆளானார் இந்த மன்னர். பின்னர் துறவி ஒருவரின் அறிவுரைப்படி, 365 ஊற்றுகளை ஆதாரமாகக் கொண்ட, பாரதத்திலேயே பெரிய ஏரியை அமைக்கும்படி ஆணையிட்டார்.
அரசன் விரும்பியதுபோன்ற நீருற்றுகளின் தொகுப்பை, இந்த ஊரில் இருந்து சுமார் 40 கி.மீ. தூரத்தில், மலைகளுக்கு இடையே பெட்வா நதியின் உற்பத்தி ஸ்தானத்துக்கு அருகே கண்டனர் பொறியாளர்கள். அவற்றை ஆதாரமாகக் கொண்டு சுமார் 65,000 ஹெக்டேர் பரப்பளவில் பெரிய ஏரியை கட்டினர். இது மால்வா பிரதேசத்துக்கு பெரும் பயனை தந்தது. பிணியால் ஏற்பட்ட போஜராஜனின் மனக்கலக்கமும் மகத்தான இந்த நற்பணியின் காரணமாக மட்டுப்பட்டது என்றே சொல்லவேண்டும். அந்த ஏரி நீரில் நீராடியபிறகு, மன்னனின் பிணியும் நீங்கியது. அதற்கு நன்றியறிதலாக போஜேஸ்வர் கோயிலை கட்டத் துவங்கினான். ஆனால் கோயில் பூர்த்தியாகும் முன்பே, ஒரு போரில் கொல்லப்பட்டான் என்கிறது சரித்திரம்.
கோயிலைச் சுற்றிலும் கிடக்கும் சில பாறைகளை கவனித்தால், அவை செதுக்குவதற்கு தயார்செய்யப்பட்டவையாகத் தெரிகின்றன. அவற்றிலும் கல் பலகைகள் சிலவற்றிலும் பொறிக்கப்பட்டிருக்கும் திட்டங்களை நோக்கும்போது… இப்போது நாம் காண்பது போன்ற இன்னும் பல ஆலயங்களை ஒரே வளாகத்தில் அமைக்க போஜராஜன் தீர்மானித்திருந்திருக்கிறான் என்பது புலனாகிறது. அவனது கனவு நனவாகியிருந்தால், அது இந்தியாவின் மிகப் பிரமாண்ட ஆலயமாகத் திகழ்ந்திருக்கும். சோழர்களின் கட்டுமானத்தைப் போன்று பெரிய மேடையின் மீது கட்டப்பட்டிருக்கிறது ஆலயம். முதலில் சிறிய மண்டபங்கள்; அதில் ஒன்றில் சிறிய சிவலிங்கம். அதைத் தாண்டினால், பிரதான கோயில். நுழைவாயிலின் பரிமாணங்கள் நிலாமணிக் கற்களால் அமைக்கப்பட்டிருக்கின்றன. பக்க நிலைகளில் திகழும்… குபேரன், துவாரபாலகர்கள், யக்ஷிணிகள், பணிப்பெண்கள், கங்கா, யமுனா ஆகிய நதிப்பெண்களின் சிற்பங்கள் வெகு அழகு.
கருவறையில் அருள்பாலிக்கும் சிவலிங்கத் திருமேனி மிகப் பெரியது. தஞ்சை பெரியகோயில் ஸ்வாமியை விட பெரியவர் என்கிறார்கள். இது இரண்டு அடுக்குள்ள சுண்ணாம்புக்கல்லால் ஆன சதுர பீடத்தின் மேல் பொருத்தப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக வானமெ கூரையாகக் காட்சியளித்த ஸ்வாமிக்கு, சமீப காலத்தில்தான் ஃபைபர் கிளாஸ் வேலைப்பாடுகளுடன் கூடிய விமானத்தை அமைத்திருக்கிறார்கள். ஏரி மட்டுமல்லாமல், பெட்வா நதியை தேக்கி வைப்பதற்காக மூன்று பெரிய அணைகளையும் கட்டியுள்ளான் போஜராஜன். பின்னாளில் படையெடுத்து வந்த ஹோஷங் ஷா என்பவன் அணைக்கட்டுகளை தகர்த்துவிட்டானாம். அதனால் பெரும் அழிவைச் சந்தித்தது இந்தப் பகுதி. ஆனாலும் போஜராஜனும் அவனது நற்காரியங்களும் மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்று விட்டன.
இங்ஙனம் வரலாற்றுப் பெருமைகளோடு, இறையின் பிரமாண்டத்தையும், அருட்காட்சத்தையும் ஒருங்கே பெற்று காலத்தால் அழியாத காவியமாகத் திகழ்கிறது, இந்த ஆலயம்.