இளங்கோவனை கைது செய்ய டெல்லி விரைந்த தனிப்படை. காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு
தமிழக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பணிபுரிந்த வளர்மதி என்ற பெண் கொடுத்த புகாரை அடுத்து தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அவரைக் கைது செய்ய தனிப்படை போலீசார் டெல்லி விரைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இளங்கோவன் மீது ஜாமீனில் வெளி வரமுடியாதபடி 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசியதை இளங்கோவன், சர்ச்சைக்குரிய வகையில் இளங்கோவன் விமர்சித்ததை கண்டித்து கடந்த ஒரு வாரமாக அதிமுகவினர் மற்றும் பாஜகவினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இளங்கோவன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன், சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பது குரிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில், இளங்கோவன் மீது சென்னை செசன்ஸ் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டுள்ள நிலையில், தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்த வளர்மதி என்பவர், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம் ஒரு புகார் அளித்தார். அந்தப் புகாரில், காமராஜர் அரங்கத்தில் சில முறைகேடுகள் நடப்பதாகவும் அதற்கு மாநில தலைவர் இளங்கோவன், நிர்வாகி நாராயணன் ஆகியோர்தான் காரணம் என்றும், தன்னை வேலையை விட்டு நீக்கியதோடு, தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.
இந்தப் புகார் மீது உடனடியாகத் தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்த தொடங்கினர். குறித்து இணை கமிஷனர் அருண், துணை கமிஷனர் சரவணன், உதவி கமிஷனர் சிவபாஸ்கர், இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இதற்கிடையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இளங்கோவன் ஜாமீன் கேட்டு நேற்று மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி வைத்தியநாதன், கைது செய்வதற்கு இடைக்கால தடை பிறப்பிக்க முடியாது; விசாரணை திங்கள்கிழமை நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று மாலையில் திடீரென்று இளங்கோவன் டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் அவர், நண்பர்கள் வீட்டில் தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலிட தலைவர்களையும் அவர் நேற்று மாலை சந்தித்து, இந்த சம்பவங்கள் குறித்து விளக்கம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, இளங்கோவன் மீதான புகாரை விசாரிக்க அமைக்கப்பட்ட தனிப்படை போலீசில் ஒரு பிரிவினர் இன்று காலை டெல்லி சென்றதாகவும், இளங்கோவன் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வந்துள்ளதால் காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.