ஆஸ்திரெலியாவில் மிகவும் பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்த லிண்ட் சாக்லேட் காபி ஷாப் என்ற காபி ஷாப்பிற்குள் இன்று காலை திடீரென தீவிரவாதி ஒருவன் பயங்கர ஆயுதங்களுடன் உள்ளே புகுந்து அங்கிருக்கும் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களை பணயக்கைதியாக பிடித்து வைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
காபி ஷாப்பின் உள்ளே ஒரே ஒரு தீவிரவாதி மட்டுமே துப்பாக்கியுடன் உள்ளே இருப்பதாக ஆஸ்திரேலியா போலீஸார் கூறுகின்றனர். மேலும் காபி ஷாப்பின் ஜன்னல் வழியாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கொடி என ஒன்று பறந்து கொண்டிருப்பதால் இது அந்த தீவிரவாதிகளின் வேலைதான் என்பது உறுதியாகியுள்ளது.
தீவிரவாதியின் பிடியில் பலர் சிக்கியிருப்பதால் அதிரடி நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்து ஆஸ்திரேலிய போலீசார் தயங்கி வருகின்றனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சிட்னியில் உள்ள அமெரிக்க தூதரககும் ஓபரா ஹவுஸும் உடனடியாக மூடப்பட்டது. ஓபரா ஹவுஸ் அருகே உள்ள பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன.
இந்த தீவிரவாத சம்பவத்தைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா முழுவதும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்காவுடன் ஆஸ்திரேலியா சேர்ந்துகொண்டு ஈராக் மற்றும் சிரியாவில் தாக்குதல் நடத்தி வருவதால் அதற்கு பழிவாங்கவே இந்த சம்பவத்தை தீவிரவாதிகள் செய்துள்ளதாக கூறப்படுகிறாது.