யோகேந்திர யாதவ் மீது தாக்குதல். டெல்லி போலீஸாருக்கு முதல்வர் கண்டனம்.
[carousel ids=”69713,69714,69715″]
கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் மூலம் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்தாலும், டெல்லி போலீஸார் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் முதல்வரே டெல்லி போலீசாரை எதிர்த்து போராடவேண்டிய நிலை அவ்வப்போது வந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் டெல்லியில், சமூக ஆர்வலர் யோகேந்திர யாதவ் அவர்கள் மீது டெல்லி போலீஸார் தாக்குதல் நடத்தியதற்கு முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மியின் முன்னாள் உறுப்பினரும், ஸ்வராஜ் அபியான் என்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவனருமான யோகேந்திர யாதவ் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் விவசாயிகள் நலனை வலியுறுத்தியும் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் இன்று மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தை அவர் நடத்தி கொண்டிருந்தபோது திடீரென அங்கு நுழைந்த டெல்லி போலீஸார் அவரை கைது செய்து இழுத்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் நிலவியது.
தனது சகாக்களுடன் அறவழியில் போராட்டம் நடத்தி கொண்டிருந்த தன்னை போலீஸார் அடித்து, இழுத்து அவமதித்தாக அவர் டெல்லி போலீஸார் மீது குற்றம் சுமத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “ஜந்தர் மந்தர் பகுதியில் என்னுடன் இணைந்து 96 பேர் விவசாயிகள் நலனை வலியுறுத்தி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோம். அங்கு வந்த போலீஸார் என்னை அடித்தனர். என்னை வலுக்கட்டாயமாக காவல்நிலையத்துக்கு இழுத்துச் சென்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் சட்டை கிழிந்த நிலையில் தோன்றும் புகைப்படம் ஒன்றையும் அவர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இந்த தாக்குதலுக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்ததோடு, அவர் மீது தாக்குதல் நடத்திய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.