சென்னை போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் சண்முகசுந்தரம் (வயது 64). இவர் சென்னை கொடுங்கையூரில் குடும்பத்துடன் வசிக்கிறார். இவர் தனக்கு சேரவேண்டிய பென்சன் தொகை முறையாக கிடைக்கவில்லை என்றும், ரூ.3 ஆயிரம் குறைவாக வழங்கப்பட்டுள்ளது என்றும், ரூ.3 ஆயிரத்தை கூட்டி கொடுத்து சரியாக வழங்க, கமிஷனர் அலுவலக பென்சன் பிரிவு அதிகாரி ஒருவர் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கேட்கிறார் என்றும், பரபரப்பு புகார் கூறி வருகிறார்.
நடுரோட்டில் படுத்து அழுது புரண்டார். 4 ஆண்டுகளாக நான் அலைகிறேன். ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுக்காததால், ரூ.3 ஆயிரத்தை குறைத்து விட்டனர். கடந்த முறை நடத்திய போராட்டத்தால் ரூ.210 மட்டும் கூட்டி உள்ளனர். இந்த ரூ.210-ம் குறைவாக கொடுத்தது தவறுதானே, எத்தனையோ தவறுகள் நடக்கிறது.
ஐஸ்-அவுசில் போலீஸ் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு விட்டு, ஒரு அதிகாரி தவறாக வருடம் ரூ.50 ஆயிரம் சம்பாதிக்கிறார். இதுபற்றியும் புகார் கொடுத்துள்ளேன். காலம்காலமாக இது போன்ற தவறுகள் நடக்கின்றன. யாரும் தட்டிக்கேட்பதில்லை. இந்த தவறுகள் ஒழிய வேண்டும் என்று ஆவேசமாக சொன்னார்.
அதன்பிறகு உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு அவரை சமாதானப்படுத்தி, அழைத்து சென்றார். கூடுதல் கமிஷனர் ரவிக்குமார், அவரிடம் விசாரணை நடத்தினார். பின்னர் குறிப்பிட்ட பென்சன் பிரிவு அதிகாரிகளை அழைத்து ரவிக்குமார் கண்டித்தார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று, போராட்டத்தில் ஈடுபட்ட சண்முகசுந்தரத்திடம் உறுதி அளித்து வழியனுப்பி வைத்தனர்.