ஆர்.கே. இடைத்தேர்தல் எதிரொலி: 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உட்பட 22 போலீஸ் உயரதிகாரிகள் இடமாற்றம்
சென்னை ஆர்கே நகரில் நடைபெறும் இடைத்தேர்தலில் பணம் அளவுக்கு அதிகமாக வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்டு வருவதால் தேர்தல் ரத்து ஆக வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறி வரும் நிலையில் தேர்தல் கமிஷனும் இந்த இடைத்தேர்தலை நியாயமாக நடத்த பலவிதங்களில் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
சமீபத்தில் சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ் அவர்கள் மாற்றப்பட்ட நிலையில் தற்போது 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உட்பட 22 போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
இதன்படி வடசென்னை சட்டம் – ஒழுங்கு கூடுதல் காவல் ஆணையராக இருந்த எம்.சி.சாரங்கன் ஐ.பி.எஸ்-க்கு பதிலாக ஜெயராம் ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதே போல், வடசென்னை இணை ஆணையராக பாஸ்கரன் ஐ.பி.எஸ்சும், வண்ணாரப்பேட்டை துணை ஆணையராக ஷாசாங்சாயும் நியமிக்கப்பட்டுள்ளனர். புளியந்தோப்பு துணை ஆணையராக ராமர், வண்ணாரப்பேட்டை உதவி ஆணையராக அர்னால்டு ஈஸ்டர் மற்றும் எம்.கே.பி.நகர் உதவி ஆணையராக அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதே போல மேலும் சில அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.