விஜய் நடித்த கத்தி படம் தீபாவளிக்கு வெளியாகுமா? என்பது குறித்து இன்று வரை எவ்வித உறுதியான தகவல்களும் வெளிவரவில்லை. தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் ‘கத்தி’ படத்தை திரையரங்குகளில் திரையிட அனுமதிக்க முடியாது என்று உறுதியாக கூறியுள்ளதால் படம் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது.
இந்நிலையில் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்ற தயாரிப்பாளர் கருணாமூர்த்தி படத்தின் வெளியீட்டுக்கு பாதுகாப்பு தரும்படி கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் போலீஸ் தரப்பில் இருந்து லைகா நிறுவனத்தின் பெயரை எடுத்துவிட்டு ரிலீஸ் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும், அதற்கு கருணாமூர்த்தி படத்தை ரிலீஸ் செய்யாவிட்டாலும் பரவாயில்லை, லைகா நிறுவனத்தின் பெயரை எடுக்க முடியாது என்று கூறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
கருணாமூர்த்தியின் இந்த பேச்சு தமிழ் அமைப்பாளர்களை மேலும் ஆத்திரமூட்டியுள்ளதாகவும், இதனால் கத்தி படத்திற்கு எதிர்ப்பு அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தியேட்டர் அதிபர்களும் கத்திக்கு பதிலாக வேறு படங்களை ரிலீஸ் செய்வதில் மும்முரம் காட்டி வருகின்றனர். இதனால் இன்று முதல் நடக்கவேண்டிய ரிசர்வேஷனும் நிறுத்தப்பட்டது. ஆனாலும் கத்தி தமிழகம் தவிர வேறு அனைத்து மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் திட்டமிட்டபடி தீபாவளி தினத்தில் ரிலீஸ் ஆகும் என தயாரிப்பாளர் தரப்பில் இருந்து உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.