சோனியா காந்தியின் இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் கனிமொழி
இஸ்லாமியர்களின் புனித நாளான ரம்ஜான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கலந்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். இதில் திமுக உள்பட பல்வேறு கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விருந்தில் சோனியா காந்தியின் மகன் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஜம்முகாஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியதற்கு வரவேற்பு தெரிவித்தார்.
பாஜக ஆளும் மாநிலங்களில் நடைபெறும் ஊழல்கள் குறித்து, வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பேச உள்ளதாக ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பாகிஸ்தான் தூதர் அப்துல் பஷீத் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஷ்டிரிய ஜனதா தள், சமாஜ்வாதி உள்ளிட்ட பல கட்சிகளுக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்திருந்தபோதிலும், அந்த கட்சிகளின் முக்கிய தலைவர்களான லல்லு பிரசாத் யாதவ் மற்றும் முலாயம் சிங் யாதவ் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.