முதல்வர் ஜெயலலிதா குணமடைய தலைவர்கள் வாழ்த்து
நேற்று முன் தினம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் உடல் நலம் தேறிவிட்டதாகவும் இன்று அல்லது நாளை அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறி வரும் நிலையில் முதல்வர் விரைவில் குணமடைய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி: காய்ச்சல் காரணமாக உடல்நலம் இன்றி இருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம்பெற வாழ்த்துகிறேன்’
தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ்: ‘காய்ச்சல் காரணமாக தாங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்து வருத்தமுற்றேன்.மக்களின் பிரார்த்தனை மற்றும் கடவுளின் ஆசி உங்களுக்கு எப்போதும் உண்டு. தாங்கள் விரைவில் குணமடைய வேண்டும். மேலும், பொதுமக்களுக்கு தாங்கள் செய்யும் தொண்டு தொடர நல்ல ஆயுளுடன் மீண்டு வர வேண்டும் என கடவுளிடம் வேண்டுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
கருணாநிதி: முதல் அமைச்சர், ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றி பல்வேறு விதமான செய்திகள் வந்து கொண்டே உள்ளன. முதல் அமைச்சர் ஜெயலலிதா மீது கொள்கை அளவில் நான் வேறுபட்டாலும், அவர்கள் விரைவில் உடல் நலம் பெற்று, பணியினைத் தொடர வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.
தமிழிசை சவுந்தரராஜன் (பாஜக மாநிலத் தலைவர்): தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பற்றி கேள்விப்பட்டேன். அவர் பூரண குணத்துடன் வீடு திரும்பி தனது பணிகளை கவனிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.
சு.திருநாவுக்கரசர் (தமிழக காங்கிரஸ் தலைவர்) : முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன். பூரண உடல் நலத்துடன் அவர் வாழ எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
வைகோ (மதிமுக பொதுச் செயலாளர்): தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவலால் மிகுந்த கவலை ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதா பூரண உடல் நலம் பெற இயற்கை அன்னையை வேண்டுகிறேன்.
ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்) : தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைந்து நலமுடன் வீடு திரும்பி, தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர்): முதலமைச்சர் ஜெயலலிதா விரைவாக பரிபூரண நலம் பெற்று வழக்கம் போல் தனது பொதுப்பணிகளை மேற்கொண்டு, மக்களுக்கு பணியாற்ற வேண்டுமென்று வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
கி.வீரமணி (திக தலைவர்): உடல்நலக் குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறியிருப்பது ஆறுதல் அளிக்கிறது. முதலமைச்சர் உடல்நலம் தேறி, விரைவில், வீடு திரும்ப வேண்டும் என்று விரும்புகிறோம்.
மு.க.ஸ்டாலின் (திமுக பொருளாளர்): தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் முழுமையாக குணம் அடைந்து, நிர்வாகப் பணிகளை தொடர வேண்டும் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் விரும்புகிறேன்.