உண்மையான பிரச்சாரம் இனிமேல்தான். கட்டுக்கட்டான பணத்துடன் களமிறங்கியுள்ள திராவிட கட்சிகள்
தமிழகத்தில் தேர்தல் மே 16ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் கடந்த ஒரு மாதமாக அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வந்தனர். பணம் கொடுத்தும், கொடுக்காமலும் கூட்டம் கூடினாலும், இந்த பிரச்சாரத்தால் பெரிதாக எந்த மாற்றமும் நடந்துவிடாது என்றும் தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே தேர்தல் உள்ள நிலையில் இன்று முதல் திராவிட கட்சிகள் திறந்துவிடும் பணமழைதான் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் என்று கூறப்படுகிறது.
என்னதான் தேர்தல் ஆணையம் கண்ணில் விளக்கெண்ணையை வைத்துக்கொண்டு பறக்கும்படையுடன் பணம் கொடுப்பதை தடுக்க முயற்சி செய்தபோதிலும் பணம் கொடுப்பவர்கள் வித்தியாசமான புதுப்புது வழிகளை கண்டுபிடித்துள்ளனர். நேற்று முன் தினம் இரவு திடீரென சென்னையின் பல பகுதிகளில் கரண்ட் கட் ஆனது. மின்சார கோளாறுதான் இதற்கு காரணம் என்று கூறப்பட்டாலும் பணப்பட்டுவாடா செய்வதற்கு வசதியாகத்தான் மின்சாரத்தை நிறுத்தி வைத்ததாக ஒரு தகவல் கூறுகின்றது.
வீட்டுக்கு தினந்தோறும் வரும் பால், பேப்பர் மற்றும் கூரியர் சர்வீசை கூட திராவிட கட்சிகள் பணப்பட்டுவாடாவுக்கு பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. கிராமப்புற பெண்களை கவர தங்க, வெள்ளி மூக்குத்திகள், குத்துவிளக்குகள் ஆகியவை லட்சக்கணக்கில் ஆர்டர் கொடுத்து பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவை வரும் நாட்களில் ரகசிய விநியோகம் செய்யப்படவுள்ளதாகவும் டுவிட்டரில் செய்தி வெளியாகியுள்ளது.
‘வாக்காளர்கள் பணம் வாங்க மாட்டோம்’ என்று தானாக திருந்தினால் மட்டுமே இந்த பணப்பட்டுவாடாவை ஒழிக்க முடியும், பறக்கும் படையினர்களால் ஓரளவு பணப்பட்டுவாடாவை கட்டுப்படுத்த முடியுமே தவிர முற்றிலும் ஒழிக்க முடியாது என்றே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.