தமிழகத்தில் காலியாக உள்ள 3 மாகராட்சி மேயர் பதவிகள் மற்றும் நகராட்சி தலைவர்களை தேர்ந்தெடுக்க நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா வேட்பாளர்கள் மனுக்கள் அதிரடியாக நிராகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நேற்று மதுரை வந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, ‘தமிழக உள்ளாட்சி இடைத்தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடுகிறது. ஆனால், முக்கியமான பல இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்தும் பல்வேறு சம்பவங்கள் பற்றியும் மாநில தேர்தல் அதிகாரியிடம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்கள் அமோக வெற்றி பெறுவார்கள்” என்று கூறினார்.
சென்னை அருகே உள்ள தாம்பரம் உள்பட ஒருசில வார்டுகளில் பாரதிய ஜனதா வேட்பாளர்களை அந்தந்த வார்டுகளை சேர்ந்தவர்கள் முன்மொழியாததால் அவர்களது வேட்புமனுக்களை தேர்தல் ஆணையம் ஏற்கனவே தள்ளுபடி செய்தது என்பது குறிப்பிடத்தகக்து.