ஜல்லிக்கட்டு பிரச்சனை. மேனகா காந்தியுடன் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று சந்திப்பு
தமிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவது உறுதி சென்ற ஆண்டு கூறிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இந்த ஆண்டும் இதே டயலாக்கை கூறியுள்ளார். ஆனால் நீதிமன்றத்தின் முட்டுக்கட்டையால் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடப்பது சந்தேகமே என பலர் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.
நேற்று நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. கடந்த ஆண்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால், துரதிர்ஷ்டவசமாக ஜல்லிக்கட்டு நடைபெறாமல் போய்விட்டது. இந்த ஆண்டு உறுதியாக ஜல்லிக்கட்டு நடக்கும்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் மேனகா காந்தியை சந்தித்து பேச இருக்கிறேன். அவர், இதற்கு தடையாக இருக்க மாட்டார். கண்டிப்பாக ஜல்லிக்கட்டை நடத்துவோம். நீர்மூழ்கி கப்பல் தொடர்பான விஷயங்கள், அது தயாரிக்கப்பட்ட நாட்டிலிருந்து வெளியாகி உள்ளன. இதற்கு நாம் பொறுப்பேற்க முடியாது.
மதுரை முதல் தென்காசி வரை 4 வழிச்சாலையாக மாறும் பணி நடந்து வருகிறது. முதல் கட்டமாக மதுரை முதல் திருமங்கலம் வரை பணிகள் முடிந்துள்ளன. திருமங்கலம் முதல் ராஜபாளையம் வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளன. இதேபோன்று தென்காசி முதல் பணகுடி வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணிகளும் விரைவில் தொடங்கப்படும்.
இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.