பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. விலகியது மகிழ்ச்சி அளிக்கவில்லை. மதிமுகவின் இந்த முடிவு இருவருக்குமே இழப்புதான் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இலங்கை தமிழர்களை கொன்று குவித்து மாபெரும் இனபடுகொலையை செய்த ராஜபக்சேவுக்கு துணையாக நின்ற மத்திய காங்கிரஸ் அரசாங்கத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்ற சிந்தனையோடும், இந்திய நாட்டை அழிவு பாதையில் அழைத்து சென்ற காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று தமிழத்தில் தூய்மையான, நேர்மையான அரசை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனையோடு 2013 ஆம் ஆண்டு தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று முயற்சித்தோம்.
எங்கள் முயற்சிக்கு முதல் ஆதரவாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, முழு ஆதரவினை தந்தார். அதன் தொடர்ச்சியாக இந்திய ஜனநாயக கட்சி, பா.ம.க., தே.மு.தி.க., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, அகில இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம், புதிய நீதி கட்சி போன்ற கட்சிகள் தங்களையும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைத்துக் கொண்டு 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தோம்.
நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழகத்தில் எதிர்பார்த்த இடங்கள் கிடைக்கவில்லை என்ற போது உள்ளபடியே மனம் வேதனை அடைந்தோம். அதிலும் குறிப்பாக, ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ தோல்வி அடைந்ததை ஜீரணிக்க முடியாமல் பல மாதங்கள் நான் வேதனை அடைந்தேன்.
பதவியேற்ற அடுத்த நிமிடத்தில் இருந்தே நரேந்திரமோடி, இலங்கை தமிழர் விஷயத்தில் முழு கவனம் கொடுத்து பணிபுரிந்து வருகிறார் என்பதை உலக தமிழர்கள் நன்கு உணர்ந்து வருகிறார்கள். பிரதமராக பொறுப்பேற்ற அன்றே நரேந்திரமோடி, இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைத்து இலங்கை தமிழர் உரிமைக்காக குரல் கொடுத்த தீரத்தை உலகம் கண்டு வியந்தது.
ஒரு நாட்டினுடைய பிரதமர் பிரச்னைகளை அணுகும்போது எவ்வளவு எச்சரிக்கை உணர்வுடன் கவனம் கொடுத்து செயல்பட வேண்டுமோ அவை அனைத்தையும் பிரதமர் மோடி கடைபிடித்து தமிழர்கள் பிரச்னைக்கு தீர்வு காண முயன்று வருவதை அனைவரும் பாராட்டுகிறார்கள். தொடர்ந்து இந்திய தமிழ் மீனவர்களின் உரிமைக்காகவும், இலங்கை தமிழர் பிரச்னையை தீர்ப்பதற்காகவும் பிரதமர் மோடி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு துணையாக நிற்பது ஒவ்வொரு தமிழனின் கடமையாக உள்ளது.
ஒரு அரசை உருவாக்க கூட்டணி அமைக்கும்போது 5 ஆண்டுகளுக்கு அந்த அரசுக்கு துணையாக இருப்போம் என்ற உறுதிபாட்டோடு தான் கூட்டணிகள் அமைக்கப்படுகின்றன. அந்த அரசின் செயல்பாடுகளை 5 ஆண்டுகள் கவனித்து அதன் செயல்பாடுகளில் மாற்றங்கள் விரும்பினால் அரங்கத்தில் சம்பந்தபட்டவர்களிடம் அது குறித்து விவாதிக்கவும் தீர்வு காணவும் கூட்டணி கட்சிகளுக்கு உரிமை உண்டு.
துரதிஷ்டவசமாக வைகோ இந்திய அரசாங்கத்தின் செயல்பாடுகளில் தொடர்ந்து குற்றம் காண்பதும், விமர்சனங்கள் வைப்பதும் பிரச்னைகளுக்கு உள்ளாகி தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. விலகும் அளவுக்கு வந்துள்ளதை வருத்தத்திற்குரியதாக கருதுகிறேன்.
பேசி முடித்திருக்க வேண்டிய விஷயங்களை முறித்து முடிக்கும் அளவுக்கு ம.தி.மு.க. வந்திருப்பது என்னை பொறுத்தவரை மகிழ்ச்சி தருவதாக நான் கருதவில்லை” என்று கூறியுள்ளார்.