திரைவிமர்சனம்
ஜோதிகா நடிப்பில் ஜெஜெ பெடரிக் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் ஓடிடி பிளாட்பாரத்தில் இன்று வெளியாகியிருக்கும் நிலையில் இந்த படத்தின் விமர்சனம் குறித்து தற்போது பார்ப்போம்
பெண் குழந்தைகள் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் 15 வருடங்கள் கழித்து அந்த வழக்கை தூசி தட்டி எழுப்பும் ஜோதிகா அந்த குற்றங்களைச் செய்தவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தாரா? அந்தக் குற்றங்களை செய்யாத ஒருவருக்கு விடுதலை பெற்று கொடுத்தாரா? என்பது தான் இந்த படத்தின் கதை
இந்த படத்தின் ஆணிவேர் ஜோதிகா. ஜோதிகா பொதுவாக ஓவர் ஆக்ஷன் செய்வார் என்று குற்றச்சாட்டு இருந்து வருவதுண்டு. ஆனால் இந்த படத்தில் அவர் எந்த ஓவர் ஆக்ஷனும் செய்யாமல் வெகு இயல்பாக தன்னுடைய கேரக்டருக்கு என்ன தேவையோ அதை மட்டும் சரியாக கொடுத்திருக்கிறார் என்பது மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட். எமோஷனல் காட்சிகளில் அற்புதமான நடிப்பு.
இந்த படத்தின் முதுகெலும்பாக உள்ள ஜோதிகா கேரக்டரை அடுத்து ஜோதிகாவின் நடிப்பையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு ஒரு நடிப்பு என்றால் அது பார்த்திபனின் நடிப்பு தான். அவருடைய ஒவ்வொரு டயலாக் டெலிவரியும் நீதிமன்றத்தில் அவர் வாதாடும் விதமும் சூப்பராக உள்ளது. பார்த்திபனை தமிழ் சினிமா இன்னும் அதிகம் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற வருத்தம் இந்த படத்தை பார்த்தபின் ஏற்படுகிறது
பார்த்திபனை அடுத்து பாக்கியராஜ், பாண்டியராஜன், பிரதாப் போத்தன், தியாகராஜன் ஆகிய நால்வருமே இயக்குனர்கள் என்பதால் அவர்களுக்கு கொடுத்த கேரக்டரை எப்படி செய்ய வேண்டும் என்பதை அவர்களுக்குச் சொல்லத் தேவையே இல்லை. வெகு சிறப்பாக செய்திருக்கிறார்கள், குறிப்பாக பாண்டியராஜனுக்கு வாய்ப்பு மிகவும் குறைவு என்றாலும் அந்த வாய்ப்பை மிக அழகாக பயன்படுத்தியுள்ளார்
இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா பாடல்கள் விஷயத்தில் மிக சிறப்பாக செயல்பட்டுள்ளார். அனைத்து பாடல்களுமே கேட்கும் வகையில் உள்ளது. அதுமட்டுமின்றி படத்தின் கதையில் உள்ள எமோஷனல் பார்வையாளருக்கு மாற்றுவது இந்த பாடல்கள் தான். ஆனால் அதே நேரத்தில் பின்னணி இசையில் அவர் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்
இந்த படத்தின் மிகப்பெரிய இன்னொரு பிளஸ் ராம்ஜியின் கேமரா. அவருடைய ஒளிப்பதிவை பாராட்ட வார்த்தைகளே இல்லை. இந்த படம் வெற்றி பெற்றால் அதில் 50 சதவீதம் அவர்தான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் எடிட்டர் ரூபனும் தனது மேக்சிமம் உழைப்பை இந்த படத்திற்காக கொட்டியுள்ளார் என்பது கூறலாம்.
இயக்குனர் ஜெஜெ பெடரிக் அவர்கள் பெண் குழந்தைகள் இந்த நாட்டில் வளரும் விதம், அவர்களுடைய பாதுகாப்பு, அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், பெற்றோர்கள் அவர்களை பாதுகாக்க வேண்டிய விதம் குறித்து மிக அழகாக திரைக்கதை எழுதியுள்ளார். இந்த படத்தின் கதை பெரும்பாலும் நீதிமன்றத்தில் நகர்வதால் கொஞ்சம் மெதுவாக நகர்வது தவிர்த்திருக்கலாம். இருப்பினும் மொத்தத்தில் இந்த படத்தின் திரைக்கதை மற்றும் இண்டர்வெல் பிளாக்கின் டுவிஸ்ட், கிளைமாக்ஸில் ஏற்படும் திருப்பம் ஆகியவை நிச்சயம் பார்வையாளர்களுக்கு ஆச்சரியமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
கடைசியாக ஒரு பெற்றோர் தங்களது பெண் குழந்தையை எந்த அளவிற்கு கவனமாக வருகின்றார்களோ, எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என்று பாதுகாப்புடன் வளர்க்கிறார்களோ அதேபோல ஆண் குழந்தையையும் வளர்க்க வேண்டும் என்று ஒரு மிகப்பெரிய மெசேஜ்ஜை இன்றைய சமூகத்திற்கு தேவையான ஒன்றை அழுத்தமாக கூறியுள்ளார் என்பதால் இந்த படத்தை நிச்சயம் அனைவரும் ஒரு முறை பார்க்க வேண்டும். குறிப்பாக ஆண் குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர்கள் இந்த படத்தை பார்த்து தங்கள் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்பதே இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸ் ஆகும்