இன்றைய இளைஞர்கள் தங்களது பொன்னான நேரத்தை பயனற்ற வகையில் இணைய தளத்தில் வீணாக்க வேண்டாம் என ரோம் நகரில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜெர்மனியில் இருந்து ரோம் நகருக்கு புனிதப்பயணமாக வந்த சுமார் 50ஆயிரம் பேர்களுக்கு ஆசி வழங்கிய போப்பாண்டவர் பிரான்சிஸ் அவர்கள், பின்னர் அவர்கள் மத்தியில் உரையாடினார்.
“காலம் என்பது பொன் போன்றது. காலம் நமக்கு கடவுள் கொடுத்த நன்கொடை. இந்த பொன்னான காலத்தை தேவையில்லாத விஷயங்களில் ஈடுபட்டு வீணடிக்க கூடாது. இன்றைய இளையதலைமுறையினர் தேவையில்லாமல் இணையத்தில் சாட் செய்வது, தரமற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பது போன்றவற்றில் அதிக காலத்தை வீணடிக்கின்றனர்.
இணையதளம் என்பது கடவுள் நமக்கு அளித்த டிஜிட்டல் பரிசு. அதன்மூலம் நல்ல விஷயங்களை கற்றுக்கொண்டு வாழ்க்கையை பயனுள்ளதாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும். இணையத்தை எச்சரிக்கையாக கையாள பெற்றோர்களும், ஆசிரியர்களும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும், என்று கூறினார்.