விரைவில் வருகிறது தபால்துறை வங்கிகள்.
இண்டர்நெட் மூலம் பெரும்பாலான கடித போக்குவரத்து தற்போது நடைபெற்று வருவதால் கிட்டத்தட்ட அனைத்து தபால் நிலையங்களும் வருவாயை இழந்துள்ளன,. எனவே மாறி வரும் டெக்னாலஜி காலத்திற்கேற்ப தபால்துறையும் அவ்வப்போது மாற்றம் செய்து வருகிறது.
அந்தவகையில் தற்போது தபால்துறை சார்பில் வங்கிகள் இயக்கப்படவுள்ளன. ரிசர்வ் வங்கி தொடர்பில் வரும் மார்ச் மாதம் முதல் தபால்துறை வங்கிகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல்துறை தலைவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை ரூ.362 கோடிக்கு செல்லாத ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் தபால் அலுவலகங்கள் மூலம் மாற்றப்பட்டுள்ளதாக கூறினார். ரூ.2 ஆயிரத்து 577 கோடி மதிப்பிலான செல்லாத ரூபாய் நோட்டுகள் தபால் அலுவலக கணக்குகளில் ‘டெபாசிட்’ செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
97 தபால் ஏ.டி.எம்.கள் சோதனை முறையில் நிறுவப்பட்டு, தொழில்நுட்ப ரீதியாக வெற்றி அடைந்துள்ளது. இதுவரை 1 லட்சம் ஏ.டி.எம். அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த மாத இறுதிக்குள் மேலும் 1 லட்சம் ஏ.டி.எம். அட்டைகள் வழங்கப்படும் என்று கூறினார்.
இந்த ஏ.டி.எம். அட்டைகள் மூலம் ஸ்டேட் பேங்க் ஏ.டி.எம்.களில் பணம் எடுத்துக்கொள்ளலாம். மார்ச் இறுதியில் தபால்துறை வங்கிகள் செயல்பாட்டுக்கு வரும். அதன் பிறகு, தபால்துறை வங்கி நேரடியாக ரிசர்வ் வங்கியுடன் தொடர்பு கொண்டு பண பரிமாற்றத்தில் ஈடுபட முடியும்
இவ்வாறு அஞ்சல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.