பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவில் தைத்திருவிழா தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

201601240102260142_Participation-of-many-devotees-in-the-temple-taittiruvila_SECVPF

பூதப்பாண்டி பூதலிங்கசாமி– சிவகாமி அம்பாள் கோவிலில் தைத்திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேரோட்டம் குமரி மாவட்டம் பூதப்பாண்டி பூதலிங்கசாமி–சிவகாமி அம்பாள் கோவிலில் தை திருவிழா கடந்த 15–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, சமய சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. 9–ம் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. காலை 6.30 மணிக்கு திருத்தேர்களில் விநாயகரையும், சாமியையும், அம்பாளையும் எழுந்தருள செய்து வடம் தொட்டு தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேரோட்ட நிகழ்ச்சியில் தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் பூதலிங்கம் பிள்ளை,மாவட்ட கவுன்சிலர் தாணுப்பிள்ளை, ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன், பூதப்பாண்டி பேரூராட்சி தலைவர் கரோலின் ஆலிவர்தாஸ், தோவாளை தாசில்தார் முத்துலெட்சுமி, அகஸ்தீஸ்வரம் தாசில்தார் மூர்த்தி, பூதப்பாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், பூதப்பாண்டி திருப்பணிமன்ற தலைவர் ராஜேந்திரன், பொதுச்செயலாளர் பாண்டியன், செயலாளர் செல்வகுமார், கோவில் கண்காணிப்பாளர் சிவராமச்சந்திரன், ஸ்ரீகாரியம் சேதுராம், பூதப்பாண்டி பேரூர் தி.மு.க. செயலாளர் ஆலிவர்தாஸ், அண்ணா தொழிற்சங்க செயலாளர் அன்னஏசுதாஸ், தோவாளை ஒன்றிய பா.ஜனதா பொருளாளர் ரெங்கநாதன், செயலாளர் சுடலைமுத்து, மாநில அமைப்பாளர் காளியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சப்தா வர்ணம் தேர், மதியம் 1.30 மணிக்கு நிலைக்கு வந்து சேர்ந்தது. அதனைத்தொடர்ந்து இரவு 9 மணிக்கு சாமியும், அம்மனும் வெள்ளி ரிஷப வாகனத்தில் பவனி வருதலும், இரவு 10 மணிக்கு சப்தா வர்ணநிகழ்ச்சியும் நடைபெற்றது. இன்று(ஞாயிற்றுக்கிழமை) 10–ந் திருவிழா நடக்கிறது. காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை 5 மணிக்கு ஆராட்டு விழாவும், இரவு 10 மணிக்கு தெப்ப உற்சவமும், 12 மணிக்கு வாணவேடிக்கையும், நள்ளிரவு 1 மணிக்கு ஆங்கார வல்லி சப்தவர்ணமும் நடக்கிறது. பலத்த பாதுகாப்பு தேரோட்டத்தையொட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன், பூதப்பாண்டி இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.