இந்த நிலையில், அமெரிக்க பாராளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தில் ஒபாமா நேற்று கடைசி முறையாக பேசினார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த உரையின்போது அவர் கூறியதாவது:-
போர்கள், பொருளாதார மந்தநிலை, குடியேறிகள் வருகை, நியாயமான ஒப்பந்தம் வேண்டி தொழிலாளர்கள் போராட்டம், மனித உரிமை போராட்டங்கள் என அமெரிக்கா தொடர்ந்து பெரிய அளவிலான மாற்றங்களை சந்தித்து வந்திருக்கிறது. ஒவ்வொரு தருணத்திலும் எதிர்காலத்தை எண்ணி பயப்படுங்கள் என்று கூறியவர்கள் உண்டு. ஆனால் அந்த அச்சங்களையெல்லாம் நாம் கடந்து வந்திருக்கிறோம்.
ஐ.எஸ். தீவிரவாத இயக்கம், அல்கொய்தா தீவிரவாத இயக்கம் ஆகியவற்றிடம் இருந்து வருகிற அச்சுறுத்தல்கள்மீது கவனம் செலுத்தத்தக்கதாக நமது வெளிநாட்டுக்கொள்கை அமைய வேண்டும்.
ஐ.எஸ். தீவிரவாதிகளால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் இல்லை. அப்படி அச்சுறுத்தல் இருப்பதாக பேசுவதுதான் அமெரிக்காவின் எதிரிகளை ஊக்கம் அடைய வைக்கிறது.
ஐ.எஸ். தீவிரவாதிகள் இல்லாமல்கூட, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், மத்திய அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியாவின் பகுதிகள் என உலகின் பல பாகங்களில் ஸ்திரமற்ற தன்மை தொடரத்தான் செய்யும். இவற்றில் சில இடங்கள் புதிய தீவிரவாத குழுக்களின் சொர்க்கபுரிகளாக உள்ளன.
இன மோதல்கள், பஞ்சம், அகதிகள் பிரச்சினை என பல பிரச்சினைகள் பிற நாடுகளில் இருக்கின்றன. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண நாம் உதவ வேண்டும் என்று உலகம் எதிர்பார்க்கிறது.
அமெரிக்காவின் பொருளாதாரம் சரிவை சந்தித்து வருகிறது என்று யாரேனும் கூறினால், அது கற்பனையானது. இதெல்லாம் சூடான அரசியல் குற்றச்சாட்டு என்று நான் ஏற்கனவே உங்களிடம் கூறி இருக்கிறேன்.
கடந்த ஆண்டு துணை ஜனாதிபதி பிடென், சந்திரனுக்கு புதிய செயற்கை கோளை அனுப்ப வேண்டும் என்று கூறினார். நான் திட்ட கட்டுப்பாட்டினை அவர் வசம் தருகிறேன்.
இந்த பூமியிலேயே வலிமையான நாடு அமெரிக்கா. எதிர்காலத்தை எண்ணி யாரும் பயப்படத் தேவை இல்லை.
உலக வரலாற்றில் அமெரிக்க படைகள்தான் அபாரமான படைகள். எந்த நாட்டுக்கும் நம்மை தாக்கும் துணிச்சல் கிடையாது. நமது கூட்டாளிகளை தாக்கும் தைரியமும் கிடையாது. ஏனெனில் அப்படி தாக்குவது அழிவுக்கான பாதை என்பதை அவர்கள் அறிவார்கள்.
நான் ஜனாதிபதி பதவி ஏற்கும் போது இருந்ததை விட நமது நாடு இப்போது உலக அளவில் மேலான நிலையில் இருக்கிறது. எந்தவொரு முக்கியமான சர்வதேச பிரச்சினையாக இருந்தாலும், உலகம் சீனாவையோ, ரஷியாவையோ அழைப்பதில்லை. நம்மைத்தான் அழைக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.