காமன்வெல்த் மாநாட்டை பிரதமர் மன்மோகன் சிங் புறக்கணித்தால் இந்தியா தனிமைப்படுத்தப்படும் என்று இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரகாஷ் கரியவாசம் திமிருடன் பேசியுள்ளார்.
இலங்கையில் உள்ள தமிழர்கள் சுதந்திரமாக வாழ அரசு நடவடிக்கை எடுக்கும் வரை அந்த நாட்டை காமன்வெல்த் அமைப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டிற்கு இந்தியாவில் இருந்து எந்த பிரதிநிதியும் கலந்துகொள்ளக் கூடாது என்றும் அந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதுபற்றி கருத்து தெரிவித்த இலங்கை தூதர் பிரகாஷ் கரியவாசம்: காமன்வெல்த் மாநாட்டை பிரதமர் புறக்கணித்தால் இந்தியா தனிமைப்படுத்தப்பட்டு விடும் என்று எச்சரித்துள்ளார். “பிரதமர் போகவில்லை என்றால் யாருக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை நாம் யோசிக்க வேண்டும். யார் தனிமைப்படுத்தப்படுவார்கள்? கனடா தவிர மற்ற அனைத்து நாடும் பங்கேற்கிறது. அதனால், பங்கேற்காத நாடு தனிமைப்படுத்தப்படும். தமிழர்களின் நிலை பற்றி தமிழக சட்டமன்றத்திற்கு தெரியவில்லை. பிரதமர் மன்மேகன் சிங்கின் பயணம் குறித்து இந்திய அரசு மட்டுமே முடிவு செய்ய உரிமை உள்ளது” என்று கரியவாசம் தெரிவித்தார்.
இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான போரின்போது நடந்துள்ளதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் தொடர்பான எந்தவொரு சர்வதேச விசாரணைக்கும் ஒத்துழைக்கப் போவதில்லை என்று இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.
விசாரணைக்கு தயாரில்லை இலங்கை கைவிரிப்பு
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் முடிவுக்கு வந்த உள்நாட்டு போரின் இறுதிக் கட்டத்தின்போது ஏற்றுகொள்ள முடியாத மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளதாக இலங்கை ராணுவத்தின் மீது குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.
இறுதிக்கட்ட போரில் சுமார் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் பல ஆயிரக் கணக்கான மக்கள் காணாமல்போகச் செய்யப்பட்டுள்ளதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் பற்றி விசாரணை நடத்துவதற்கு வருகிற மார்ச் மாதத்துக்குள் இலங்கை பதில் கூறாவிட்டால், சர்வதேச விசாரணை ஒன்று தேவைப்படலாம் என்று ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையர் நவநீதம் பிள்ளை கூறியிருக்கிறார்.
இலங்கை அரசாங்கம் உள்நாட்டிலேயே விசாரணை நடைபெற்று வருவதாக கூறிவருகிறது.
இலங்கை மீதுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் பற்றிய விசாரணைகளில் முன்னேற்றம் இல்லையென்று சுட்டிக்காட்டி, இலங்கையில் நடக்கவுள்ள காமன்வெல்த் உச்சி மாநாட்டை பல்வேறு நாடுகளின் தலைவர்களும் புறக்கனிக்க வேண்டும் என்று சர்வதேச அளவில் கோரிக்கைகள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.