இன்று காலை முதல் சமூக வலைத்தளங்களில் இபோலோ வைரஸ் கிருமியால் கர்நாடகாவில் ஒரு மாணவர் இறந்துவிட்டதாக செய்திகள் வெளிவந்து கொண்டுள்ளது. ஆனால் இந்த செய்தி தவறானது என்றும், குறிப்பிட்ட அந்த மாணவர் இருதய கோளாறு காரணமாக ஒரு மாதத்திற்கு முன்பே இறந்துவிட்டார் என்றும், இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அந்த மாணவர் படித்த கல்லூரியின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை சமுக வலைத்தளமான ஃபேஸ்புக்கில், மங்களூரில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னால்ஜி கர்நாடகா என்ற கல்லூரியில் (NITK) எம்.டெக் படித்து வந்த ஸ்ரீஜித் என்ற மாணவர் இபோலா வைரஸ் தாக்கி மரணம் அடைந்துவிட்டதாக தகவல் காட்டுத்தீ போன்று பரவியது. இதனால் கர்நாடகாவில் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பதட்டம் ஏற்பட்டது. ஆனால் இதுகுறித்து NITK கல்லூரி சார்பில் இன்று மங்களூர் சைபர் க்ரைம் போலீஸில் புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரில் ஸ்ரீஜித் என்ற மாணவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அதாவது ஜூன் 21ஆம் தேதியே இருதய கோளாறு காரணமாக இறந்துவிட்டதாகவும், அவர் இபோலா வைரஸ் தாக்கி இறந்ததாக தவறான செய்தியை சிலர் பரப்பிவருவதாகவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த புகார் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு சைபர் க்ரைம் போலீஸாரை மங்களூர் அசிஸ்டெண்ட் கமிஷனர் ரவிகுமார் கேட்டுக்கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.