2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளும் முஸ்லீம்களுக்கு தண்டனை. பிரவீன் தொகாடியாவின் சர்ச்சை பேச்சால் பரபரப்பு
பாரத பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதில் இருந்தே இந்து அமைப்புகள் பல சர்ச்சைக்குள்ளான கருத்துக்களை கூறி அவ்வப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் சிறுபான்மையினர் பெரும் கலக்கத்தில் இருப்பதாக கூறப்படும் நிலையில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் செயல் தலைவர் பிரவீன் தொகாடியா மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொண்டால் அதை கிரிமினல் குற்றமாக ஆக்க வேண்டும் என்று அவர் பேசியதே இந்த பரபரப்புக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் எடுக்கப்பட்ட மதவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பில், முஸ்லீம் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் இந்துக்களின் வளர்ச்சி விகிதம் குறைந்திருப்பதாகவும் தகவல் வெளியானது. இதை மேற்கோள் காட்டி பேசிய பிரவீன் தொகாடியா, இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுள்ள முஸ்லீம்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று சர்ச்சை கருத்தை வெளியிட்டுள்ளார்.
டெல்லியில் நேற்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் 3 நாள் ஆய்வு கூட்டம் துவங்கியது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் செயல் தலைவர் பிரவீன் தொகாடியா மிகவும் ஆவேசமாக பேசினார். அவர் பேசியதாவது, ”முஸ்லீம்கள் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொண்டால் அதை கிரிமினல் குற்றமாக ஆக்க வேண்டும். அவர்களுக்கு ரேஷன், வேலை, கல்வி உள்ளிட்ட அனைத்து வாய்ப்புகளையும் தடை செய்ய வேண்டும்.
திட்டமிட்டு முஸ்லீம்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முறை கடைபிடிக்கப்படுகிறது. இந்த பாப்புலேஷன் ஜிகாத்திற்கு எதிராக நாம் நிற்காவிட்டால், பாரதம் விரைவில் இஸ்லாமியர்களின் நாடாக மாறிவிடும். அரசியல் அழுத்தங்களை தவிர்த்து இரண்டு குழந்தைகள் என்ற விதிமுறையை செயல்படுத்த வேண்டும். அண்மையில் வெளியான மக்கள் தொகை கணக்கெடுப்பு விழித்துக்கொள்வதற்கான ஒரு அழைப்பு” என்று சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து உள்ளார். இதேபோன்ற ஒரு கருத்தை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கோவையில் எச்.ராஜா பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.