கர்ப்ப கால நீரிழிவு குளுக்கோஸ் தாங்குதிறன் குறைவதால் சிக்கல்களை உண்டாக்கும். நீரிழிவால் பாதிக்கப்படுகிற கர்ப்பிணிகளில் 90 சதவிகிதத்தினருக்கும் இந்த வகை பிரச்னையே ஏற்படும். கர்ப்பத்தின் தொடக்கத்திலோ, அது அறியப்படும்போதோ, இந்த நீரிழிவும் அறியப்படும். ஏற்கனவே டைப் – 1 அல்லது டைப் – 2 நீரிழிவு உள்ள பெண்கள் மற்றும் கர்ப்ப கால நீரிழிவு ஏற்படக்கூடிய நிலையில் உள்ளவர்கள்… இவர்களுக்குப் பிரசவத்தையே குழப்பமாக்கக்கூடிய தன்மை நீரிழிவுக்கு உண்டு.
தாய்க்கும் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் ஆபத்து விளைவிக்கவோ, வளர்ச்சிக் குறைபாடு உண்டாக்கவோ இது காரணமாகலாம். கர்ப்ப காலத்தின் நடுவிலோ, இறுதிக் கட்டத்திலோ இந்தக் குழப்பங்கள் தீவிரமாகும். கர்ப்ப கால நீரிழிவு அல்லது அதற்கு முந்தைய நிலையில் அதிகம் பாதிக்கப்படுவது 25 வயதுக்குப் பிறகு கர்ப்பம் தரிப்பவர்களே இந்தப் பிரச்னைக்கு அதிகம் ஆளாகிறார்கள். எடை அதிகம் கொண்டவர்களும் இதில் சிக்கலாம். குடும்பப் பின்னணியில் நீரிழிவு கொண்டிருப்பவர்களுக்கும் இது ஏற்படலாம்
* கர்ப்ப கால நீரிழிவு உள்ளவர்களில் 10-25 சதவிகிதத்தினரை Pre-eclampsia பிரச்சனை தாக்குகிறது. இது உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரில் அதிக புரோட்டீன் கலப்பு ஏற்பட்டு சிறுநீரகம் பாதிக்கப்படுகிற நிலை.
* நோய்த்தொற்று மற்றும் அதனால் ஏற்படும் வீக்கம்… தாய்க்கு மட்டுமல்லாமல் கருவுக்கும் தொற்றக்கூடும்.
* குழந்தை பிறந்த உடன் அதீத ரத்தப்போக்கு
* சிசேரியன் செய்ய வேண்டிய நிலை
* எடை கூடுதல்
* உயர் ரத்த அழுத்தம்
* கரு கலைதல்
* மூன்றாவது ட்ரைமஸ்டரில் குழந்தை இறத்தல்
* டைப் – 2 நீரிழிவாக மாற்றம் அடைதல்
* வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்த அதிக இன்சுலின் தேவைப்படுதல்
* ரெட்டினோபதி எனும் விழித்திரை நோய் ஏற்படுதல்
* நெப்ரோபதி எனும் சிறுநீரகப் பிரச்சனைகள் உண்டாகுதல்… சிறுநீரகச் செயல் இழப்புக்கான அறிகுறிகள் தோன்றுதல்
* கரோனரி ஆர்டரி எனும் இதயப் பிரச்சனை வலுவடைதல், ஏற்கனவே பிரச்சனை அதிகம் இருப்பின் பிரசவ மரணம் ஏற்படுதல்
* கார்டியோமையோபதி எனும் இதயத்தசை நோய் ஏற்படுதல்.