காமராஜர் ஆட்சி மட்டும்தான் பொற்காலமாம். எம்.ஜி.ஆரையும் விமர்சனம் செய்கிறாரா பிரேமலதா?
தேமுதிகவின் தலைவர் தற்போது யார் என்ற சந்தேகம் மாற்று கட்சியினர்களுக்கு மட்டுமின்றி தேமுதிக தொண்டர்களுக்கே ஏற்பட்டுள்ளது. மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக இணைந்தது என்பதை மட்டும் கூறிவிட்டு விஜயகாந்த் கிட்டத்தட்ட தலைமறைவாகிவிட்டார். பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுப்பது, தேர்தல் பிரச்சாரம் செய்வது, தேர்தல் அறிக்கை வெளியிடுவது என எல்லாமே இப்போது பிரேலதாதான். இந்நிலையில் அவரது கட்சியினர்களும் பிரேமலதா முகத்தில் தெரியுமாறு நடந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் கோவையில் தேர்தல் விளக்கப் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய “திமுக, அதிமுகவுக்கு மாற்றாக உருவாக்கப்பட்டது தான் தேமுதிக – மக்கள் நலக்கூட்டணி. இந்த கூட்டணி 2016ல் ஆட்சியை பிடித்து சரித்திரம் படைக்கும். திமுக, அதிமுக வேண்டாம் என அனைத்து தரப்பு மக்களும் ஒரே மனநிலையில் உள்ளனர். திமுக, அதிமுகவின் குறைகளை கூறி, ஓட்டு வாங்க வேண்டும் என்ற நிலை தேமுதிகவுக்கு இல்லை. கடந்த கால ஆட்சியில் காமராஜர் ஆட்சி மட்டும் தான் பொற்கால ஆட்சி. அதன்பின், எம்.ஜி.ஆர்., ஆட்சியில், எம்.ஜி.ஆர்., கொஞ்சம் மனிதாபிமானத்தோடு நடந்து கொண்டார்’ என்று கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர் ஆட்சியில்தான் சத்துணவு திட்டம் உள்பட பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. ஆனால் கருப்பு எம்.ஜி.ஆர் என்று தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் விஜயகாந்த், தன்னுடைய மனைவியின் மூலம் எம்.ஜி.ஆர் ஆட்சியையே விமர்சனம் செய்துள்ளது எம்.ஜி.ஆர். விசுவாசுகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்களும் விசுவாசுகளும் பிரேமலதாவுக்கு கடும் கண்டனத்தை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.