இந்திய குடியரசு தினவிழாவில் கலந்து கொள்வதற்காக இன்று இந்தியா வந்த அமெரிக்க அதிபர் ஒபாமாவை பாரத பிரதமர் நரேந்திரமோடி கட்டிப்பிடித்து வரவேற்றார். ஒபாமாவுடன் அவருடைய மனைவி மிச்சேல் ஒபாமாவும் வருகை தந்திருந்தார்.
இந்திய குடியரசு தினவிழாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் வருவது இதுவே முதல் தடவையாகும். பிரதமரின் அழைப்பை ஏற்று 3 நாள் பயணமாக அமெரிக்க அதிபர் ஒபாமா தனது மனைவி மற்றும் அமெரிக்க உயர் அதிகாரிகளுடன் இன்று இந்தியா வந்தார். டெல்லி பாலம் விமான நிலையத்தில் வந்திறங்கிய ஒபாமாவை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று வரவேற்றார்.
பிரதமரின் வரவேற்புக்கு பின்னர் ஒபாமாவும் அவரது மனைவியும் அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட பிரத்யேக ஆடம்பர காரான பீஸ்ட் காரில் டெல்லியில் உள்ள மெளரியா ஓட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இன்று மதியம் ஒபாமாவுக்கு ஜனாதிபதி மாளிகை வீரர்கள் அணிவகுப்பு மரியாதை கொடுத்தனர். பின்னர் காந்தி சமாதிக்கு சென்று அமெரிக்க அதிபர் ஒபாமா மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஒபாமாவின் சுற்றுப்பயணத்தை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.