தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்தில் ஜனாதிபதி கையெழுத்து. மாணவர்கள் மகிழ்ச்சி
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கும் தமிழக அரசின் சட்டத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கியுள்ளார். இதனால் ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைத்துள்ளதாக கருதப்படுகிறது,.
சென்னை மெரீனாவில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நடத்தி கட்டுக்கோப்பான, தன்னலமற்ற போராட்டத்தின் எதிரொலியாக ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கும் வகையில் தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்தது. இந்த சட்டம் ஜனவரி 23ஆம் தேதி சட்டப்பேரவையில் சிறப்புக்கூட்டம் மூலம் நிரந்தர சட்டமாக நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் இந்த சட்டம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலைப் பெற அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்து இன்று, குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டார். இதன் மூலம், ஜல்லிக்கட்டுக்கான தமிழக அரசின் சட்டம் முழுமையாக நடைமுறைக்கு வந்துள்ளது. ஆனால், இச்சட்டம் தமிழகத்திற்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜல்லிக்கட்டு சட்டம் பூரணமாக அமலுக்கு வந்ததை ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.