மகாத்மா காந்தியின் கையால் எழுதிய டைரியை மோடிக்கு பரிசளித்த புதின்
இரண்டு நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இந்நிலையில் பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின் காந்தியடிகள் எழுதிய டைரியின் பக்கம் ஒன்றினை பரிசளித்துள்ளார். இதுகுறித்து மோடி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
‘கையெழுத்து பயிற்சி குறிப்புகள் அடங்கிய காந்தியடிகளின் டைரி பக்கம் ஒன்றினை புடின் பரிசளித்தார். அதோடு, 18-ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட மேற்குவங்கத்தை சேர்ந்த வாள் ஒன்றினையும் பரிசளித்தார். மிகவும் நுணுக்கமான சில்வரை கொண்டு வேலைப்பாடுகள் செய்யப்பட்ட வாள் அது. பரிசளித்ததற்காக புதினுக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தனிமையில் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்புக்குப் பின் அவர் டுவிட்டரில், ரஷ்ய அதிபர் புதினுடன் இரு நாட்டு உறவுகள் குறித்து உரையாடியதாகவும், அவருடனான சந்திப்பு தித்திப்பான அனுபவமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து இன்று நடைபெற உள்ள 16-வது இந்தியா-ரஷ்யா உச்சிமாநாட்டில் இரு நாட்டு தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இந்த மாநாட்டில் அணுசக்தி, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது குறிப்பிடத்தக்கது.