தெலுங்கானா மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர மாநில முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி பதவி விலகியதை அடுத்த அந்த மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த கவர்னர் நரசிம்மன் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தரவுள்ளது.
ஆந்திராவில் கடந்த 1973-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜெய் ஆந்திரா கோஷத்துடன் தீவிரமான போராட்டம் ஏற்பட்டதால் அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப் பட்டது. அதன்பின்னர் 41 ஆண்டுகள் கழித்து தற்போதுதான் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு்ள்ளது.
இந்நிலையில் சீமந்திரா பகுதியை சேர்ந்த 12-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,.க்கள் அதிலிருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தனர். மேலும் சில கிரண்குமார் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தெலுங்கு தேசக்கட்சியில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் கிரண்குமார் ரெட்டி தனிக்கட்சி ஆரம்பிக்கும் முடிவில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் வரும் பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் நடைபெறாது என்றும் குறைந்தது ஆறு மாத காலத்துக்கு அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமலில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.