ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளர் மீராகுமார் இன்று மனுதாக்கல்
ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் போட்டியிடும் மீராகுமார் இன்று(ஜூன் 28) வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
ஜனாதிபதி தேர்தல் வருகிற ஜூலை 17ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மத்தியில் ஆளும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் பீகார் மாநில ஆளுநர் ராம்நாத் கோவிந்த வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவர் கடந்த 23ஆம் தேதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இந்நிலையில் காங். தலைமையிலான எதிர்கட்சிகள் சார்பில் போட்டியிடும் மக்களவை முன்னாள் சபாநாயகர் மீராகுமார், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் சில ஆதரவு கட்சிகளின் தலைவர்கள் முன்னிலையில் இன்று(ஜூன் 28) வேட்பு மனு தாக்கல் செய்கிறார். இவருக்கு இடது சாரிகள் உள்ளிட்ட 16 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
வருகிற ஜூன் 30ஆம் தேதி முதல் குஜராத்தில் உள்ள சபர்மதி ஆஸ்ரமத்தில் இருந்து தனது பிரசாரத்தை துவங்கவிருக்கும் மீராகுமார், ஜூலை முதல் வாரத்தில் சென்னை வர திட்டமிட்டுள்ளார். சென்னை வருகையின்போது திமுக தலைவர் கருணாநிதி மற்றும் செயல் தலைவர் ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து ஆதரவு கோரவிருக்கிறார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மீராகுமார், ஜனநாயக மதிப்புகளை நிலைநாட்டவும், சமூகநீதி, வெளிப்படைத்தன்மையை உருவாக்கவும், சாதீய அமைப்பை ஒழிக்கவுமே தாம் இந்த தேர்தலில் போட்டியிடுவதாகக் குறிப்பிட்டார்.
தலித் வேட்பாளருக்கு எதிராக நிறுத்தப்பட்ட தலித் வேட்பாளர் என்ற விமர்சனத்தை ஏற்க முடியாது என்று கூறிய அவர், சாதீய கட்டமைப்பு இந்த பூமியில் புதைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.