பீட்டா அமைப்பில் இருந்து திரிஷா விலக வற்புறுத்தல்

a333ddae-a053-475d-8e4e-d5e904abcaed_S_secvpf

தமிழ் பட உலகமும் ஜல்லிக்கட்டும் இரண்டற கலந்தவை. நிறைய படங்களில் ஜல்லிக்கட்டு காட்சிகள் இடம்பெற்றுள்ளன. சிவாஜி கணேசன் நடித்த ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டு தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

அதில் ‘அஞ்சாத சிங்கம் என் காளை’ என்று பாடி ஜல்லிக்கட்டு காளையை வளர்ப்பவராக பத்மினி நடித்து இருந்தார். அந்த காளையை ஜெமினிகணேசன் அடக்கி அவரை மணமுடிப்பது போன்று காட்சி இருந்தது. ‘தாய்க்கு பின் தாரம்’ படத்தில் காளையை அடக்கும் காட்சியில் எம்.ஜி.ஆர் நடித்து இருந்தார். ‘முரட்டுக்காளை’ படத்தில் ரஜினிகாந்த் ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கும் காளையன் என்ற கதாபாத்திரத்திலேயே நடித்து இருந்தார். ‘விருமாண்டி’ படத்தில் கமல்ஹாசன் ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் காட்சி உள்ளது.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு, மிருக வதை என்று ‘பீட்டா’ அமைப்பு எதிர்த்து வருகிறது. பொங்கல் பண்டிகையில் இந்த விளையாட்டை நடத்தவும் சுப்ரீம் கோர்ட்டில் தடை வாங்கி இருக்கிறது. இதனால் தமிழ் அமைப்புகள் மத்தியில் ‘பீட்டா’ அமைப்புக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சமூக வலைத்தளங்களிலும் கண்டனங்கள் குவிகின்றன. தமிழகத்தில் ‘பீட்டா’ அமைப்பின் தூதுவராக நடிகை திரிஷா இருக்கிறார். விலங்குகள் பாதுகாப்புக்காக இந்த அமைப்பு தயார் செய்யும் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.

விலங்குகளை பாதுகாக்க வேண்டும் என்று டுவிட்டரிலும் பீட்டாவுக்கு ஆதரவான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். இதனால் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களின் கோபம் திரிஷாவை நோக்கி திரும்பி இருக்கிறது. ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து மதுரையில் தமிழ் அமைப்புகள் நடத்திய போராட்டத்தில் திரிஷாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தமிழ் படங்கள்தான் திரிஷாவை வளர்த்தன. எனவே தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டை எதிர்க்கும் பீட்டா அமைப்பில் இருந்து திரிஷா விலக வேண்டும். இல்லாவிட்டால் அவர் நடித்து விரைவில் திரைக்கு வர உள்ள அரண்மனை-2 படத்தை புறக்கணிப்போம் என்று அவர்கள் கூறினர். தென் மாவட்டங்களில் அவரது படங்களை ஓட விடமாட்டோம் என்றும் தெரிவித்தனர்.

இந்து மக்கள் கட்சியும் திரிஷா பீட்டா அமைப்பில் இருந்து விலக வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. நடிகை எமிஜாக்சன் ஏற்கனவே டுவிட்டரில் ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என்று கருத்தை பதிவு செய்து இருந்தார். இதையடுத்து அவரது உருவ பொம்மையை சென்னையில் எரித்து போராட்டம் நடத்தினார்கள். இதனால் அவர் கலந்து கொண்ட படவிழா பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply