நீண்ட நாள் தலைவலி, குறுகிய கால தலைவலி என, இரண்டு வகைகள் உண்டு. நெற்றியின் இரண்டு பக்கத்திலும், காற்று சிற்றலைகள் உள்ளன. குளிர் தாக்குதலால், இவற்றின் உள்பக்க ஜவ்வு, வீக்கம் அடைந்து, மூக்கு சிற்றலை ஜவ்வில், சைனஸ் அலர்ஜியை ஏற்படுத்துவதால், தலைவலி ஏற்படுகிறது.
காது, மூக்கு, தொண்டை நிபுணர் அறிவுரையின்படி, 5 நாட்கள் மாத்திரை உட்கொண்டால், சீராகி விடும். தலையின் ஒரு பக்கத்தில் ஒற்றைத் தலைவலி வரும். நீண்டநேரம் இருக்கும். வாந்தி வந்தால் குறைந்துவிடும். சில பேருக்கு, ஆண்டுக்கணக்கில் பாதிப்பு வரும். வலி நிவாரணிகளை, டாக்டரின் ஆலோசனை இன்றி சாப்பிடுவதால், மூளைக்கு ரத்த ஓட்டம் சீராக இல்லாமல், ஒற்றைத் தலைவலி வரலாம்.
நரம்பியல் நிபுணர்களை பார்த்து, சிகிச்சை எடுப்பது அவசியம். சாப்பிடாமல் பட்டினி கிடப்போர், உரிய நேரத்திற்கு சாப்பிடாமல் ஒரு வேளை மட்டும் சாப்பிடுவோர், முறையாக உணவு பழக்கம் இல்லாதோருக்கும், தலைவலி வரும். சரியான உணவு பழக்கம் அவசியம். இந்தியாவில், பெரும்பாலும் தலைவலியால் பாதிக்கப்படுவதற்கு, ரத்தக் கொதிப்பு காரணமாக உள்ளது.
இதற்காக, ரத்த அழுத்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது. பெரிய மருத்துவமனைகளில், தலைவலிக்கென பிரத்யேக பிரிவுகள் துவங்கப்பட்டுள்ளன. மொத்தத்தில், சரியான நேரத்தில் உணவு, சரியான தூக்கம், மன அழுத்தத்தால் பாதிக்காத வகையில் திட்டமிட்டு பணியாற்றுதல் ஆகியவற்றால், தலைவலி பாதிப்பில் இருந்து தப்பலாம்.