ராமேஸ்வரத்தில் அப்துல் கலாமின் இறுதிச்சடங்கு. பிரதமர் உள்பட 6 முதலமைச்சர்கள் பங்கேற்பார்கள்
முன்னாள் குடியரசு தலைவரும், அணு விஞ்ஞானியுமான அப்துல்கலாம் அவர்களின் இறுதி சடங்கில் பிரதமர் மற்றும் ஆறு மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
மறைந்த அப்துல்கலாம் அவர்களின் உடலை ராமேஸ்வரத்திலேயே அடக்கம் செய்ய வேண்டும் என்று அவருடைய மூத்த சகோதரர் மற்றும் உறவினர்கள் மற்றும் குடும்பத்தார்களின் விருப்பப்படி ராமேஸ்வரத்திலேயே அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, பாம்பன்-ராமேஸ்வரம் இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் அரியாங்குண்டு கிராமம் அருகே, அப்துல்கலாமின் உடலை அடக்கம் செய்ய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து ராமேஸ்வரம் கொண்டு வரப்படும் அப்துல்கலாமின் உடல், நாளை பொதுமக்கள் அஞ்சலிக்காக அங்குள்ள பள்ளி மைதானத்தில் வைக்கப்படும் என்றும் அங்கு, பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தியவுடன் அரசு மரியாதையுடன் அவருடைய உடல் அடக்கம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே, அப்துல்கலாம் அவர்களின் இறுதிச்சடங்கு குறித்து ராமேஸ்வரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவரது பேரன் ஷேக் சலீம், “அப்துல்கலாமின் உடல் நாளை ராமேஸ்வரத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. நாளை மறுதினம் (30ஆம் தேதி) காலை 10.30 மணிக்கு கலாமின் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. இந்த இறுதிச்சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் 6 மாநில முதல்வர்கள் பங்கேற்பார்கள் ” என்று தெரிவித்தார்