இன்றும் நாளையும் பிரேசில் நாட்டில் நடைபெற உள்ள பிரிக்ஸ் அமைப்பின் 6-வது உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள பாரத பிரதமர் நரேந்திரமோடி பிரேசில் சென்றுள்ளார். இந்த மாநாட்டில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரேசில் அதிபர் டில்மா ரோசெப், தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா ஆகியோர்களும் பங்கேற்கிறார்கள்.
மேலும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ளும்படி அர்ஜென்டினா, பொலிவியா, ஈகுவடார், பெரு, சுரினாம், வெனிசுலா, உருகுவே, சிலி உள்ளிட்ட 11 நாடுகளின் தலைவர்களுக்கும் முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது.
நேற்று காலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட இந்திய பிரதமர் மோடி ஜெர்மனி வழியாக பிரேசில் சென்றடைந்தார். அவருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை மந்திரி நிர்மலா சீதாராமன், வெளியுறவு செயலாளர் சுஜாதா சிங், நிதி அமைச்சக செயலாளர் அரவிந்த் மாயாராம் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் சென்றனர்.
இந்த மாநாட்டில் கலந்துகொள்வதன் மூலம் சீனா, பிரேசில், ரஷியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளின் தலைவர்களை முதல் முறையாக சந்திக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், அந்த வாய்ப்பை பயனுள்ளதாக்க முயற்சி செய்ய உள்ளதாகவும் நேற்றிரவு அளித்த பேட்டி ஒன்றில் மோடி தெரிவித்தார்.
இந்த மாநாட்டின்போது புதின் (ரஷியா), ஜேக்கப் ஜூமா (தென் ஆப்பிரிக்கா), ரோசெப்(பிரேசில்) ஆகியோரை தனித்தனியாகவும் பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார். குறிப்பாக பிரேசில் நாட்டின் அதிபருடனான பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் தென் அமெரிக்க வட்டாரத்தில் இந்தியாவின் முக்கிய வர்த்தக கூட்டாளியாக பிரேசில் திகழ்கிறது.
எனவே பிரேசில் அதிபர் ரோசெப்பை பிரதமர் மோடி சந்திக்கும்போது, இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவு மட்டுமின்றி சுரங்க எரிசக்தி, சுகாதாரம், சுற்றுச்சூழல் ஆகியவை குறித்த பேச்சு வார்த்தைகளும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.