தமிழக வெள்ள சேதம் குறித்து அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை: மக்களவையில் வெங்கய்ய நாயுடு தகவல்

images (2)

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் தொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்ட அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.

இது தொடர்பாக மக்களவையில் அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியதாவது:

தமிழகத்தின் வெள்ளச்சேதம் குறித்து இன்று பிரதமர் மோடி தீவிர ஆலோசனை நடத்தினார். அதில் நான், உள்துறை மற்றும் நிதி அமைச்சர் ஆகியோர் கலந்து கொண்டு வெள்ள சேதம் பற்றிய தகவல்களை தெரிவித்தோம். தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவுடன் நேற்று தொலைபேசியில் பேசிய பிரதமர் வெள்ளசேதம் குறித்து விவர மாகக் கேட்டறிந்தார். அப்போது மத்திய அரசால் இயன்ற அனைத்து உதவிகளையும் அளிப்பதாக உறுதி அளித்திருந்தார். தமிழக வெள்ள சேதம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் உயர் நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. நிவாரண நடவடிக்கைகளுக்காக, மத்திய அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் பல்வேறு அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு பேச உள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

தொடர் கனமழை காரணமாக சென்னையின் பெரும்பாலான உள்கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளன. பேருந்து, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி அரையாண்டுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மழை காரணமாக 188 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம், ஆந்திரம் மற்றும் மேற்கு வங்கம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விவாதங்கள் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். தமிழக நிவாரண முகாம்களுக்கு உணவுப் பொட்டலங்களை அனுப்பும்படி மத்திய விமானத் துறை அமைச்சகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை வெள்ளசேத படங்களை எனது மகள் மற்றும் பேத்தி எனக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பியுள்ளனர். அதைப் பார்க்கும் போது அங்கு சாதாரண மக்களுக்கு ஏற்பட்டுள்ள நிலையை பார்த்து மனவருத்தம் கொள்கிறது. நான் இதுவரை கேள்விப்படாததும், எதிர்பாராததுமாக கடந்த 100 வருடங்களில் இல்லாத அளவுக்கு மிகக்கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இது அரசை குற்றம் கூற வேண்டிய தருணம் அல்ல. கடற்படை, தரைப்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலதிக உதவிகளும் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply