சந்நியாசியாக மாறிவிட்டாரா முருகன்? நளினி அதிர்ச்சி

nalini murugan sanyasiமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்த் கொலை வழக்கில் கைதாகி கடந்த பல வருடங்களாக சிறையில் இருந்து வரும் முருகன், திடீரென சந்நியாசியாக மாறிவிட்டதாக சிறையில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. இவருடைய மனைவி நளினியும், இதே கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொலை வழக்கில் சிக்கிய ஒருவர் திடீரென சந்நியாசியாக மாறி தன்னுடைய சிறை அறையையே ஆன்மிகப் பீடமாக மாற்றி, எந்த நேரமும் பூஜை புனஸ்காரங்களில் ஈடுபட்டு வருவதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து முருகன் ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது: இதற்கான விதை, நான் பிறந்த இத்தாவில் கிராமத்திலேயே விதைக்கப்பட்டு விட்டது. என் தந்தை 12 வயதிலேயே தீட்சை பெற்று, அங்கு உள்ள முருகன் கோயிலுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அவர் முழுமையான ஆன்மிகவாதியாக மாறிய பின்னர், பக்தி மார்க்கக் கருமங்களில் எங்களையும் ஈடுபடுத்தினார்.

சிறைக்கு வந்த நாளில் இருந்தே, என் மானசீக ஆன்மிகக் குருவான ராமகிருஷ்ண பரமஹம்சரின் சிந்தனைகளையும் விவேகானந்தரின் போதனைகளையும் படித்துத் தியானித்தபடி இருந்தேன். ஒருகட்டத்தில் என்னை முழுமையாக ஆன்மிகத்துக்குள் இழுப்பது போல உணரவும் பயந்து பின்வாங்கி விட்டேன். பின்னர் கிருஷ்ண பக்தி இயக்க ஸ்வாமிகளான ஜெய கோவிந்ததாஸ் அவர்களின் போதனைகள், என்னை மீண்டும் ஆன்மிகத்துக்குள் அழைத்துச் சென்றன.

இதுவரை நான் வாழ்ந்த வாழ்வில் என் விருப்பங்கள், ஆசைகள் எதுவுமே நிறைவேறாமல் போனாலும்கூட, அதை வாழ்க்கை என நம்பி எதிர்நீச்சல் எனும் அறியாமையில் உழன்று கொண்டிருந்தேன். ஆனால், இப்போது பரவசமான ஓர் உலகத்துக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறேன். கடலைச் சேரும் நதியில் சத்தம் இல்லாமல் நடனமாடிப் போகும் ஓர் இலை போல மென்மையானவனாக என்னை உணர்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

தன்னுடைய ஆன்மீகப்பாதையை தனது மனைவியும் மகளும் விரும்பவில்லை என்று கூறிய முருகன், ‘ கணவன் துறவறம் மேற்கொள்வதை, எந்த மனைவியும் விரும்ப மாட்டார். மகளும் அப்படித்தான். அவர்களைச் சமாதானப்படுத்துவது சாதாரண விஷயம் அல்ல. என் மனைவியும் தினசரி தியானத்தில் ஈடுபடுகிறவர்தான். ஆனாலும், என் ஆன்மிகப் பயண வேகத்தைக் குறைக்கப் போராடுகிறார். அது அறியாமையின் தவிப்பு. துறவறம் என்பது, குடும்பத்தை விட்டு ஓடுவது அல்ல. அதை அவரும் புரிந்து கொள்ளும் நாள் விரைவில் வரும்’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply