தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதல் விலையை ரூ.10 என்ற அளவில் தமிழக அரசு உயர்த்தியதை அடுத்து ஆவின் பால் விலை ரூ.10 உயர்ந்தது. இந்நிலையில் தமிழகத்தில் தனியார் பால் விலையும் இன்று முதல் லிட்டருக்கு ரூ.4 உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பால்முகவர்கள் சங்க மாநில தலைவர் எஸ்.ஏ.பொன்னுச்சாமி இன்று காலை பத்த்ரிகையாளர்களுக்கு அளித்த அறிக்கை ஒன்றில், ”தமிழக மக்களின் பயன்பாட்டிற்கு தினமும் 1½ கோடி லிட்டர் பால் தேவைப்படுகிறது. தமிழக அரசு நிறுவனமான ஆவின் மூலம் 21 லட்சம் லிட்டர் பால் மட்டுமே சப்ளை செய்யப்படுகிறது. மீதி ஒரு கோடியே 29 லட்சம் லிட்டர் பால் தனியாரால் சப்ளை செய்யப்படுகிறது.
நவம்பர் 1 ஆம் தேதி முதல் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், தனியார் பால் கொள்முதல் விலையும், ஆவின் பால் கொள்முதல் விலையும் சரிசமமாக இருப்பதால், பால் உற்பத்தியாளர்கள் ஆவின் நிறுவனத்துக்கே பால் கொடுக்க தொடங்கிவிடுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு தனியார் நிறுவனமும் பால் விலையை தற்போது உயர்த்தியுள்ளது.
ஏற்கனவே தனியார் பால் நிறுவனங்கள் கடந்த மாதம் அக்டோபர் 5 ஆம் தேதி விலை ஏற்றம் செய்யப்பட்ட நிலவரப்படி, கொழுப்புச்சத்து செறிவூட்டப்பட்ட பால் ஒரு லிட்டர் ரூ.48க்கும், சமன்படுத்தப்பட்ட பால் ரூ.44க்கும், நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.40க்கும், கொழுப்புச்சத்து நீக்கப்பட்ட பால் ரூ.34க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் மொத்தம் 35க்கும் மேற்பட்ட பால் நிறுவனங்கள் பால் விற்பனை செய்கின்றன. இதில் தமிழகத்தில் முன்னணி நிறுவனங்களான ஆரோக்கியா, திருமலா, ஹெரிடேஜ், டோட்லா, ஜெர்சி ஆகிய நிறுவனங்கள் தான் பால்விலையை நிர்ணயம் செய்கின்றன. இதில், ஆரோக்கியா பால் நிறுவனம் மட்டும் இன்று முதல் பால் விலையை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தியுள்ளது.
தற்போது இந்த நிறுவனம் உயர்த்தியுள்ளதால் மற்ற நிறுவனங்களும் விரைவில் விலையை உயர்த்துவார்கள். அவர்களும் இதேபோல் லிட்டருக்கு ரூ.4 உயர்த்துவார்களா? அல்லது லிட்டருக்கு ரூ.6 முதல் ரூ.8 வரை உயர்த்துவார்களா? என்பது அறிக்கை வந்தால்தான் எங்களுக்கும் தெரியும்.
ஏற்கனவே பால் உற்பத்தியாளர்களுக்கு பசும்பாலுக்கு ரூ.27.50 காசும், எருமை பாலுக்கு ரூ.36 என கொள்முதல் விலை வழங்கப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வு மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை ரூ.2 வரை உயர வாய்ப்பு இருக்கிறது. இந்த விலை உயர்வை பால் முகவர்கள் சங்கம் சார்பில் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.
மேலும், தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்துவது குறித்து தன்னிச்சையாக முடிவு எடுப்பதை தடுக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் சட்டம் அடிப்படையில் அவசர சட்டம் ஏற்படுத்தப்பட வேண்டும். விலை நிர்ணயம் செய்வதற்கென்று குழு ஒன்று அமைத்து, அந்த குழு பரிந்துரை செய்யும் விலையை தமிழக அரசு நிர்ணயம் செய்ய வேண்டும்” என்றார்.
ஆவின் பால் உயர்வை அடுத்து தனியார் பால் விலையும் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.