நாளைய முழு அடைப்பு போராட்டத்திற்கு தனியார் பள்ளிகள் ஆதரவு
தமிழகத்தில் நாளை நடைபெறவுள்ள வேலைநிறுத்த போராட்டத்திற்கு திமுக உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் ஆதரவு கொடுத்துள்ள இதுவரை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை குறித்த தகவல்கள் இல்லை. இந்நிலையில் நாளை நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலாண்டு தேர்வும் சனிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்த தனியார் பள்ளி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நந்தகுமார், ‘தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், இதன் காரணமாக தமிழகத்தில் இயங்கி வரும் 18 ஆயிரம் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் இயங்காது என்றும் அவர் கூறினார்.
தமிழக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு, பல்வேறு விவசாய சங்கங்களின் அமைப்புகள் மற்றும் அனைத்து வணிகர் சங்கங்கள் ஆகியோரின் ஆதரவுடன் நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு அதிமுக தவிர கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு கொடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.