ஸ்மார்ட் போன்கள் பயன்மிக்கவைதான். ஆனால் ஸ்மார்ட் போன் பயன்பாட்டில் உள்ள பெரிய சிக்கல் என்னவென்றால் அது நமது நேரத்தைத் திருடிக்கொள்கிறது.
இமெயிலும், வாட்ஸ் ஆப் செய்திகளும், பேஸ்புக் நிலைத் தகவல்களும் வந்து விழுந்துகொண்டே இருப்பதால் அடிக்கடி போனைக் கையில் எடுத்துப் பார்க்க வேண்டியதிருக்கிறது.
இதனால் வாசிப்புக்கான நேரம் குறையலாம். குடும்பத்துடன் செலவிடும் நேரம் குறையலாம். சாப்பிடும் நேரத்தில்கூட போனில் கவனம் பதிப்பதால் உறவுகளுடனான சுமுகம் பாதிக்கப்படலாம்.
இந்தப் பாதிப்பைக் குறைக்க, கொஞ்ச நேரம் போனைக் கையில் எடுக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா? ஐபோன் பயனாளிக்கு இந்த வாய்ப்பை நோ போன் ஜோன் செயலி அளிக்கிறது.
போன் பயன்பாட்டுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் எனத் தீர்மானிக்கும் நேரத்தில் இந்தச் செயலியை இயக்கிக்கொள்ள வேண்டும். உடனே இந்தச் செயலி நீங்கள் நோ போன் ஜோனில் இருக்கிறீர்கள் என உங்கள் டிவிட்டர் மூலம் செய்தி அனுப்பும்.
குறிப்பிட்ட அந்த நேரத்துக்கு நீங்கள் போனை மறந்து மற்ற வேலைகளில் மூழ்கலாம். எவ்வளவு நேரம் போன் இல்லாமல் இருக்க முடிகிறது எனும் தகவலையும் பகிர்ந்துகொள்ளலாம். மற்றவர்கள் பகிரும் தகவலையும் பார்த்து ஊக்கம் பெறலாம்.
செயலிக்கு: nophonezone.co