நேபாளத்தில் வேந்தர் மூவீஸ் மதன் பதுங்கல். போலீஸார் சுற்றி வளைப்பா?
கடந்த மே மாதம் கங்கையில் சமாதியாக போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமாய் மறைந்த வேந்தர் மூவீஸ் மதனை தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வரும் இரண்டு மாத மர்மங்கள் விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என தெரிகிறது. நேபாளத்தில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த மதனை போலீஸார் சுற்றி வளைத்துவிட்டதாகவும் விரைவில் அவர் கைது செய்யப்பட்டு சென்னை கொண்டு வரப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
போலீஸ் வட்டாரத்தில் இதுகுறித்து கூறியபோது, ‘”மாயமான மதனை தனிப்படை அமைத்து பல இடங்களில் தேடி வருகிறோம். மோசடி வழக்கு தொடர்பாக பலரிடம் விசாரணை நடத்தி விட்டோம். பாரிவேந்தரின் மகன் ரவி பச்சமுத்துவிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் மதனின் உறவினர்கள், நண்பர்களின் நடவடிக்கைகளை ரகசியமாகக் கண்காணித்து வந்தோம். அதில் எங்களுக்கு முக்கியமான தகவல் கிடைத்தது. சில நாட்களுக்கு முன்பு மதனின் உறவினர் ஒருவருக்கு செல்போனில் அவர் பேசிய விவரம் தெரிந்தது. உடனடியாக அந்த செல்போன் சிக்னலை வைத்து மதன் இருக்கும் இடத்தைக் கண்டறிந்தோம். அந்த சிக்னல் நேபாளத்தை காட்டியது. உடனடியாகத் தனிப்படை போலீஸார் நேபாளத்துக்கு விரைந்தனர். மதன் தங்கி இருக்கும் இடத்தை போலீஸார் நெருங்கி விட்டனர். விரைவில் மதனை கைது செய்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம்” என்று கூறினர்
இந்நிலையில் நேற்று முன் தினம் மதன், புதுச்சேரி கோடீஸ்வரர் ராஜகோபாலுக்கு கடிதம் எழுதியதாகவும் அந்த கடிதத்தில், ‘தான் பணம் வாங்கிய மாணவர்களுக்கு கல்லூரியில் ‘சீட்’ கொடுக்கவேண்டும் என்று கூறியிருந்ததாகவும் செய்திகள் பரவி வருகிறது. இந்த ராஜகோபாலின் கல்லூரி மற்றும் வீடுகளில் தான் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி, 52 கோடி ரூபாயைக் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.