ராமரை விமர்சனம் செய்த கர்நாடக பேராசிரியர் கைது. மாணவர்கள் போராட்டம்
கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரு பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறை பேராசிரியராக பணிபுரிந்து வரும் மகேஷ் சந்திர குரு என்பவர் பயிற்சி பட்டறை நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, ‘ராமாயணத்தின் முக்கிய கதாபாத்திரமான ராமன் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளார். கடவுளாக வணங்கப்படும் அவரே சீதையின் நடத்தை மீது சந்தேகம் கொண்டார். சீதையை குற்றவாளிபோல நடத்தினார். ஆனால் ஊடகங்கள் ராமரை கடவுளாக மாற்றிவிட்டன” என்று பேசினார். மேலும் அவர் இன்னொரு பேராசிரியருடன் இணைந்து பகவத் கீதையை எரிக்க முயன்றார். அவருடைய பேச்சுக்கும், செயலுக்கும் அவரது சக ஆசிரியர்களும், அவரிடம் கல்வி பயிலும் மாணவர்களே எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. தற்போது அவர் மைசூரி சிறையில் உள்ளார். இந்நிலையில் ‘அரசு ஊழியர் குற்றவழக்கில் கைதானால் 48 மணி நேரத்துக்குள் பணி இடை நீக்கம் செய்ய வேண்டும் என்பது விதி. அதன்படி பேராசிரியர் மகேஷ் சந்திர குரு பணி இடைநீக்கம் செய்யப் பட்டுள்ளார். இந்த வழக்கில் ஜாமீன் கிடைத்து வெளியே வந்தவுடன், இடைநீக்க ஆணை ரத்து செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
கைது நடவடிக்கை மற்றும் இடைநீக்க நடவடிக்கைக்கு எதிராக கர்நாடக மாநிலத்தில் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மைசூரு பல்கலைக் கழகத்தை சேர்ந்த மாணவர்களும், மகிஷாசுர அமைப்பினர்கள் ஆகியோர் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். இதில் ஏராளமான மனித உரிமை ஆர்வலர்கள் பங்கேற்று, பேராசிரியர் மகேஷ் சந்திர குருவை விடுவிக்கக் கோரி முழக்கங்கள் எழுப்பினர்.