சந்தன கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட வெள்ளத்துரை டிஎஸ்பி உள்ளிட்ட 20 போலீஸ் அதிகாரிகளுக்கு அரசு பதவி உயர்வு அளித்தது. இதை எதிர்த்து இன்ஸ்பெக்டர் கவுதமன், அகஸ்டின் பால்சுதாகர், யாகூப் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன், போலீஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்த விவகாரத்தில் டிவிஷன் பெஞ்ச் உத்தரவை மீறியது ஏன்? என்று 4ம் தேதி அரசு விரிவாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இதை தொடர்ந்து பதவி உயர்வு அளித்த உத்தரவு நீதிமன்ற அவமதிப்பு செயல், எனவே அரசு மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி வக்கீல் சிங்காரவேலன் வழக்கை தனியாக தாக்கல் செய்தார். இவ்வழக்குகள் நேற்று நீதிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீசார் சார்பாக வக்கீல்கள் சிங்காரவேலன், ஜி.சங்கரன் ஆகியோர் ஆஜராகி, போலீசாருக்கு பதவி உயர்வு அளித்த உத்தரவு தவறானது. இதற்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும். வழக்கு தாக்கல் செய்தவர்கள் பழிவாங்கப்பட்டு வருகிறார்கள். இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றனர். தமிழக அரசு சார்பாக அட்வகேட் ஜெனரல் சோமையாஜி ஆஜராகி, பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்டார். இதை கேட்ட நீதிபதி வரும் 11ம் தேதி அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார். அதுவரை வழக்கு தாக்கல் செய்தவர்களை அரசு பழிவாங்க கூடாது. யாரையும் துன்புறுத்தக்கூடாது என்று உத்தரவிட்டார்.