சீன பட்டாசு விற்பனையை எதிர்த்து மதுரையில் ஆர்ப்பாட்டம். சரத்குமார் அறிவிப்பு
இந்தியாவில் சீன பட்டாசுகளை விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்திருந்தபோதிலும், வேறு பெயரில் ஏராளமான சீன பட்டாசுகள் இந்தியாவின் பல நகரங்களில் விற்பனையாகி வருவதாகவும், இத்தகைய பட்டாசுகளின் விற்பனையை தடுக்க மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 26ஆம் தேதி மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாகவும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியாவில் உள்ள சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, சிவகாசி பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில், அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு பட்டாசு தயாரிப்புகள் உள்ளன. மலிவாகக் கிடைக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக தரம் குறைந்த சீனப் பொருட்களை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்கிறார்கள்.
இப்போது மத்திய அரசு தடை விதித்திருக்கிற சூழ்நிலையிலும் கூட, அரசை ஏமாற்றி சீனப் பட்டாசுகள் வேறு பொருட்களின் பெயரில் இந்தியாவிற்குள் கொண்டு வரப்படுகின்றன.
இந்தியாவில் ஆண்டு தோறும் 4000 கோடி ரூபாய்க்கு பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் 3500 கோடி ரூபாய் பட்டாசுகள் சிவகாசி பகுதியில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஏறத்தாழ நேரடியாகவும், மறைமுகமாகவும் பட்டாசுத் தொழிலில் தமிழகத்தில் 5 லட்சம் பேர் ஈடுபட்டிருக்கிறார்கள்.
சீனப் பட்டாசுகளின் வரவு மக்கள் உயிருக்கும், உடைமைகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்துவதுடன், நம்நாட்டின், தமிழகத்தின் சிறு தொழில் வீழ்ச்சிக்கும், பல லட்சம் பேர் வேலை வாய்ப்பை, வருவாயை இழக்கும் சூழ் நிலையையும் ஏற்படுத்தி விடும் என்பது உறுதி.
தமிழக அரசு, பட்டாசு சில்லறை விற்பனையாளர்களுக்கு லைசென்ஸ் கொடுக்கும் போது சீனப் பட்டாசு விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையோடு அனுமதி வழங்க வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
சீனப் பட்டாசுகள் வட இந்தியாவில் அதிகம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே சீனப்பட்டாசுகள் விற்கும் முயற்சியை மத்திய அரசு நாடு முழுவதும் தடுத்து நிறுத்திட கோரியும், சீனப்பட்டாசுகள் பதுக்கி வைத்திருப்பதை கண்டறிந்து பறிமுதல் செய்யக் கோரியும் மத்திய அரசை வலியுறுத்தி மதுரையில் சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் 26–ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு சரத்குமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
English Summary: Protest against China crackers sales in India said Sarathkumar